SELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் ரவாங்கில் சமூக மண்டபம் நிர்மாணிப்பு

ஷா ஆலம், ஜன 23- சிலாங்கூர் பென்யாயாங் திட்ட நிதியின் கீழ் (பி.எஸ்.பி.) ரவாங், பண்டார் கன்றி ஹோம், கம்போங் சுங்கை பாக்காவில் சமூக மண்டபம் நிர்மாணிக்கப்படுகிறது.

கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நான்கு லட்சம் வெள்ளி செலவிலான இந்த திட்டம் அடுத்த மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

இந்த மண்டப நிர்மாணிப்பின் வழி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர்கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் பொது மண்டபம் இல்லாதது தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இந்த மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய 90 விழுக்காடு பூர்த்தியடைந்து விட்டன. அடுத்த மாதம் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த மண்டபத்தை பொது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு வேண்டுமென்றே சேதம் விளைக்கும் செயல்களையும் தடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த மண்டபத்தை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமின்றி பூப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும் பயன்படுத்த முடியும் என அவர் சொன்னார்.

பொது வசதிகளை மேம்படுத்துவது, தரம் உயர்த்துவது மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மலிவு விலை மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளைச் சீரமைப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள மாநில அரசு கடந்த 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடியே 40 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.


Pengarang :