SELANGOR

வீடுகள், அடுக்குமாடி வீடுகள் தொடர்பான 11,361 வழக்குகளுக்குக் கடந்தாண்டு தீர்வு

புத்ரா ஜெயா, ஜன 30 – வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளை உட்படுத்திய
11,361 விசாரணை மன்ற வழக்குகளுக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சி
மன்ற அமைச்சு கடந்தாண்டு தீர்வு கண்டுள்ளது.

அவற்றில் 1,331 வழக்குகள் வீடுகளையும் 10,030 வழக்குகள் அடுக்குமாடி
குடியிருப்புகளையும் உள்ளடக்கியிருந்ததாக அதன் அமைச்சர் ஙா கோர்
மிங் கூறினார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் 11,361 வழக்குகளுக்கு அதாவது மொத்த
எண்ணிக்கையில் 98 விழுக்காட்டிற்கு தீர்வு கண்டுள்ளோம். அமைச்சின்
வரலாற்றில் அதிகமான வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது இதுவே
முதன் முறையாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விரு பிரிவு வீடுகளை உட்படுத்திய சர்ச்சைகள் தொடர்பிலும்
கடந்தாண்டில் மிக அதிகமாக அதாவது 11,263 வழக்குகள் விசாரணை
மன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த
எண்ணிக்கை 9,617ஆக இருந்தது என்று அவர் சொன்னார்.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியவர்களின்
கோரிக்கைகள் மற்றும் சர்ச்சைகளுக்கு உயர்நெறியுடனும் குறைந்த
செலவிலும் குறுகிய காலத்திலும் தீர்வு காண்பது குடியிருப்பு விசாரணை
மன்றத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியவர்களின்
கோரிச்கைளுக்கு கே.பி.ஐ. எனப்படும் அடைவு நிலைக்கான முதன்மை
குறியீட்டின் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட 100 நாட்களுக்குள் தீர்வு
காணும் கடப்பாட்டை அந்த விசாரணை மன்றம் கொண்டுள்ளது என அவர்
தெரிவித்தார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இ-டி.பி.எஸ். முறை
அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 1,500 வழக்குகள் இயங்கலை
வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :