புத்ராஜெயா, ஜன 30: நாட்டில் உள்ள 40,000 டாக்சி ஓட்டுநர்களுக்கு சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் பாதுகாப்பு வழங்க போக்குவரத்து அமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது.

பெரும்பாலும் முதியோர் மற்றும் ஆயுதப்படையின் மூத்த வீரர்கள் டாக்சி ஓட்டுநர்களாக உள்ளனர். ஆகவே, அவர்களின் நலனை காப்பதற்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

“ஊழியர்களின் சேமநிதி வாரியம் (EPF) அல்லது சொக்சோவிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், குறைந்த பட்சம் இந்த காப்பு திட்டம் பாதுகாப்பை வழங்கும்.

பிப்ரவரி 5 ஆம் தேதி முடிவடையும் கோல்ட் தொடருக்கான “NPI“ ஏலத்தில் இருந்து பெறப்பட்ட வருமானத்தை சேகரித்த பின்னரே பங்களிப்பு திட்டத்தின் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று லோக் கூறினார்.

“எங்களிடம் ஏற்கனவே புள்ளிவிவரங்கள் உள்ளன, மேலும் இதில் உள்ள நிதி தாக்கங்கள் பற்றியும் எங்களுக்குத் தெரியும். கோல்ட் சீரிஸ் ஏலம் முடிந்ததும் விவரங்கள் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

ஓட்டுநர் உரிமங்கள் நிலுவையில் இருப்பது உடனடியாக கையாளப்படும் என்றும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் லோக் கூறினார்.

“பல ஓட்டுநர் உரிமம் வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம், நாங்கள் அவற்றைச் சமாளித்து செயல்முறையை விரைவு படுத்துவோம். மேலும், அணுகுமுறைகளில் ஒன்று ஈ-டெஸ்டிங் ஆகும். இது சீனப் புத்தாண்டுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

“இந்த செயல்முறையை விரைவு படுத்த நாங்கள் ஊக்குவிப்புகளை வழங்குவோம். நான் முதலில் அதை அறிவிக்க விரும்பவில்லை. சீனப் புத்தாண்டுக்குப் பிறகு நாங்கள் விவரங்களைத் தருவோம்,” என்றார்.

– பெர்னாமா