NATIONAL

ஜோகூர் துறைமுகத்தில் டீசல் கடத்தல் கும்பல் முறியடிப்பு- 16 பேர் கைது

கோலாலம்பூர், ஜன 31- பாசீர் கூடாங்கில் உள்ள ஜோகூர் துறைமுகத்தில்
அரச மலேசிய போலீஸ் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில்
மானிய விலை டீசல் கடத்தல் முயற்சி வெற்றிகரமாக
முறியடிக்கப்பட்டதோடு மூன்று உள்நாட்டினரும் 13 அந்நிய நாட்டு கப்பல்
சிப்பந்திகளும் கைது செய்யப்பட்டனர்.

கடல் போலீஸ் உளவுப் பிரிவு, இரண்டாம் பிராந்திய கடல் போலீஸ் பிரிவு
ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச்
சோதனையில் 138,270 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல்
செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது
ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

இந்த சோதனையில் 2 கோடியே 6 லட்சம் வெள்ளி மதிப்புள்ள இரு
டாங்கர் லோரிகள், ஒரு எண்ணெய்க் கப்பல் மற்றும் பல்வேறு
உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் துஷ்ரேயோகம் செய்யப்படுவதையும்
நாட்டின் சொத்துகள் வீணே விரயமாவதையும் தடுப்பதில் உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுடன் அரச மலேசிய
போலீஸ் படை இணைந்து செயல்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில்
கூறினார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் 1974ஆம் ஆண்டு விநியோகக்
கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 21வது பிரிவு மற்றும் 1959/63ஆம் ஆண்டு
குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :