NATIONAL

மணமகளை ஏமாற்றினார்- ஆடை விற்பனை மையத்தின் விற்பனையாளருக்குச் சிறை, பிரம்படி

கோலாலம்பூர், ஜன 31- தனது வாடிக்கையாளரிடம் 9,000 வெள்ளியை
மோசடி செய்த குற்றத்திற்காகப் பகாங் மாநிலத்தின் ரவுப்பைச் சேர்ந்த
ஆடை மற்றும் அழகு சாதன விற்பனை மையத்தின் உரிமையாளர்
ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓராண்டுச் சிறைத்தண்டனையும்
ஒரு பிரம்படியும் வழங்கித் தீர்ப்பளித்தது.

தனக்கெதிரான குற்றச்சாட்டை ஹஸ்மேருன் ஹஷிம் (வயது 31) ஒப்புக்
கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அதிக்கா முகமது அலியாஸ்
முகமது சாய்ம் இந்த தீர்ப்பை வழங்கினார். அவருக்கு எதிரான இந்த
தண்டனை இன்று தொடங்கி அமலுக்கு வருவதாகவும் தனது
தீர்ப்பில் கூறினார்.

திருமண திட்டமிடல் சேவையை வழங்குவதாகக் கூறி 29 வயது
மணமகளை நம்ப வைத்து தனது சி.ஐ.எம்.பி. வங்கிக் கணக்கிற்கு இரு
பரிவர்த்தனைகள் மூலம் 9,000 வெள்ளியை மாற்றம் செய்ய வைத்ததாக
ஹஸ்மேருன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இங்குள்ள செராஸ், தாமான் ஷாமிலின் பெர்க்காசாவிலுள்ள தனது வீட்டில்
கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 23 மற்றும் 25ஆம் தேதிகளில்
இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையில்
கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் பத்தாண்டு
வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை
செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் அவர்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

வயதான பெற்றோரையும் பள்ளி செல்லும் உடன் பிறப்புகளையும்
பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் குறைந்த பட்ச தண்டனை
வழங்கும்படி ஹஸ்மேருன் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

நான் குற்றத்தை ஒப்புக் கொள்வதோடு பிரம்படியை நீக்குமாறு
நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தனது கருணை
மனுவில் குறிப்பிட்டார்.

எனினும் அரசுத் தரப்பு சார்பில் வழக்கை நடத்திய துணை பப்ளிக்
புரோசிகியூட்டர் நாடியா எலினா ஜமாலுடின் அக்பால், குற்றவாளிக்கு
கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதோடு பிரம்படியை
நீக்குவதற்கான சூழ்நிலை எதுவும் கருணை மனுவில் இல்லை என்றார்.


Pengarang :