NATIONAL

காரிலும் கைப்பையிலும் வெ.3,753 ரொக்கம்- 10 போலீஸ்காரர்கள் மீது விசாரணை

கோலாலம்பூர், பிப் 5 – நேற்று முன்தினம் அதிகாலை மேற்கொள்ளப்பட்ட
‘ஓப் அல்கோஹோல்‘ சாலைத் தடுப்புச் சோதனையில் சம்பந்தப்பட்டிருந்த
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சாலை
போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்தவர்களின்
கைப்பை மற்றும் காரில் 3,753 வெள்ளி ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்டதைத்
தொடர்ந்து அந்த சோதனையில் பங்கு கொண்ட ஒரு சார்ஜன் உள்ளிட்ட 10
போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அச்சாலைத் தடுப்புச் சோதனையில் பங்கு கொண்டவர்கள் மீது புக்கிட்
அமான் உயர் நெறி தரக் கண்காணிப்பு துறையின் அதிகாரிகள் அதிகாலை
2.30 மணியளவில் மேற்கொண்ட திடீர்ச் சோதனையில் அந்த ரொக்கத்
தொகை கண்டு பிடிக்கப்பட்டதாகச் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த சோதனையின் போது சார்ஜன் அந்தஸ்து கொண்ட அதிகாரியிடம்
3,313 வெள்ளி ரொக்கமும் அவர்களின் காரில் மேலும் 440 வெள்ளியும்
கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் ஊழல் அல்லது போக்குவரத்து விதிமீறல்
நிகழ்ந்துள்ளதாக என்பதைக் கண்டறிவதற்காக இந்த திடீர் சோதனை
தொடர்பில் ஒழுங்கு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர்
மேலும் சொன்னார்.

விசாரணை முற்றுப் பெறும் வரை சம்பந்தப்பட்ட அனைத்து
போலீஸ்காரர்களும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவிலிருந்து
நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :