NATIONAL

கடந்தாண்டு 2,093 சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்கள் மூடப்பட்டன – அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், பிப் 6 – நாடு முழுவதும் கடந்தாண்டு 2,093 சட்டவிரோதக்
குப்பைக் கொட்டும் மையங்கள் மூடப்பட்ட வேளையில் அம்மையங்களில்
16 லட்சம் வெள்ளி செலவில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங்
கூறினார்.

ஏழு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சட்டவிரோதக் குப்பைக் கொட்டும்
மையங்களில் நடவடிக்கைகளை நிறுத்தி துப்புரவு பணி 2007ஆம்
ஆண்டு திடக்கழிவு மற்றும் பொது துப்புரவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ்
மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த சட்டவிரோத மையங்களிலிருந்து 6,410 டன் குப்பைகள்
அகற்றப்பட்டன. மடாணி அரசாங்கம் ஓராண்டு காலத்தில் 2,000க்கும்
மேற்பட்ட சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்களை மூடியுள்ளது.

பொறுப்புணர்வு இல்லாமை மற்றும் சட்டவிரோத குப்பைக் கொட்டும்
கும்பல்களின் நடவடிக்கை காரணமாக இந்த விவகாரம் எவ்வளவு
கடுமையானதாக மாறியுள்ளது என்பதை இது காட்டுகிறது என்றார் அவர்.

அதன் காரணமாக நாங்கள் சட்ட அமலாக்கத்தை மிகவும் விரிவான
அளவில் மேற்கொண்டோம். இதுவரை நாடு முழுவதும் உள்ள 2093
சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்களில் எஸ்.டபள்யூ. கார்ப்ரேஷன்
மூலம் 1082 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர்
தெரிவித்தார்.

தலைநகர், ஜாலான் டேவிஸில் உள்ள சட்டவிரோதக் குப்பைக் கொட்டும்
மையத்தை மூடும் மற்றும் துப்புரவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இது தவிர, சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டியது தொடர்பில் 15
வழக்குகள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு மொத்தம் 168,000
வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :