NATIONAL

போதைப் பொருள் வழக்கிலிருந்து பொது பல்கலைக்கழக விரிவுரையாளர் விடுதலை

கோலாலம்பூர், பிப் 6 – மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போதைப்
பொருளைக் கடத்தியது மற்றும் வைத்திருந்து தொடர்பில் கொண்டு
வரப்பட்டக் குற்றச்சாட்டிலிருந்து பொது பல்கலைக்கழக விரிவுரையாளர்
ஒருவரை இங்குள்ள உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

டி.எஸ். கேப்ரியல சாம்சன் (வயது 35) என்ற அந்த விரிவுரையாளருக்கு
எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம்
உள்ளதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டதாக நீதிபதி டத்தோ
முகமது ஜாமில் ஹூசேன் தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரப் பொருளாக விளங்கும் போதைப் பொருள்
குற்றஞ்சாட்டப்பட்டவர் தவிர்த்து மற்றொரு நபரின் கட்டுப்பாட்டிலும்
இருந்துள்ளதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அந்த போதைப் பொருள்
எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை மற்றொரு நபர் தெரிவித்தார் என
அரசுத் தரப்பின் மூன்றாவது சாட்சியான போலீஸ்காரர் விசாரணையின்
போது கூறியுள்ளார்.

அந்த நபரை சாட்சியாக அழைத்திருந்தால் போதைப் பொருள்
கண்டுபிடிக்கப்பட்டதை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியிருப்பார் என்பதோடு
அந்த போதைப் பொருள் விநியோகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரும்
சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதும் தெளிவாகியிருக்கும்.

மேலும், அந்த வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பினை அந்நபர்
கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது. அந்த வீட்டில் நுழையும்
அதிகாரம் உள்ளவர்களால் மட்டுமே போதைப் பொருள் எங்கு
வைக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

அரசுத் தரப்பின் விசாரணையில் பெரிய இடைவெளி காணப்படுவதால்
குற்றஞ்சாட்டப்பட்டவரை தற்காப்பு வாதம் புரிய அழைப்பது என்னைப்
பொறுத்தவரை பாதுகாப்பானதல்ல எனக் கருதுகிறேன்.

ஆகவே, குற்றஞ்சாட்டப்பட்டவரை இரு குற்றஞ்சாட்டுகளிலிருந்தும்
வழக்கிலிருந்தும் விடுதலை செய்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இரவு 10.15
மணியளவில் 1278.61 கிராம் கஞ்சாவை விநியோகம் செய்ததாகக் கேப்ரியல்
மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :