NATIONAL

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. கணவன்-மனைவி பரிதாப மரணம்

கோலாலம்பூர், பிப் 13- சாலையின் அவசரத் தடத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த வாகனத்தின் பின்புறம் மோட்டார்
சைக்கிள் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த கணவன்-மனைவி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 415.1வது
கிலோ மீட்டரில் லெம்பா பிரிங்கின் மற்றும் புக்கிட் தாகார் இடையே
நேற்று நிகழ்ந்தது.

நேற்று காலை 11.05 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 36 மற்றும் 38
வயதுடைய அத்தம்பதியர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்தக்
காயங்கள் காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உலு சிலாங்கூர்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசால் தாஹ்ரிம்
கூறினார்.

அத்தம்பதியர் பேராக் மாநிலத்தின் கமுண்டிங்கில் உள்ள தங்களின் சொந்த
ஊரில் விடுமுறையைக் கழித்து விட்டு யமாஹா என்மேக்ஸ் ரக
மோட்டார் சைக்கிளில் தலைநகர் திரும்பிக் கொண்டிருந்த போது
இவ்விபத்து நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அவர்கள் பயணம் செய்த மோட்டார்
சைக்கிள் அவசரத் தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிட்சுபிஸி
ட்ரைத்தோன் ரக நான்கு சக்கர இயக்க வாகனத்தை மோதியுள்ளது.

பழுதடைந்த காரணத்தால் அந்த வாகனத்தை அதன் ஓட்டுநரான 36
வயதுப் பெண் அவசரத் தடத்தில் நிறுத்தி வைத்துள்ளார் என அவர்
குறிப்பிட்டார்.

இந்த மோதலின் விளைவாக அவ்விருவரும் சாலையின் வலது பக்கத்தில்
விழுந்துள்ளனர். அச்சமயம், 65 வயது நபர் ஒருவர் ஓட்டி வந்தம்டோயோட்டா வியோஸ் கார் அவர்களை மோதியுள்ளது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

உயிரிழந்த அத்தம்பதியரின் உடல்கள் சவப்பரிசோதனைக்காகக் கோல குபு
பாரு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர்,
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்றார்.


Pengarang :