NATIONAL

2024 ஆசிய பூப்பந்துப் போட்டி சுமூகமாக நடைபெறும்- ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் நம்பிக்கை

ஷா ஆலம், பிப் 13 – உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய  26 அணிகள் பங்கேற்கும்  2024 ஆசிய குழு நிலையிலான  பூப்பந்து சாம்பியன்ஷிப் (பி ஏ.டி.சி.) போட்டி இன்று தொடங்கி பிப்ரவரி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இங்குள்ள செத்தியா ஆலமில் உள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடங்கி வைக்கவிருப்பதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர்  என்ற முறையில், அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் குறிப்பாக விளையாட்டுகள் மற்றும் வீரர்கள் சம்பந்தப்பட்ட தேவைகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்துள்ளோம்.  இந்த வெற்றியாளர் கிண்ணப் போட்டி சுமூகமாக நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் திறக்கப்பட்ட  இணைய டிக்கெட் விற்பனை  ஊக்கமளிக்கும் வகையிலான ஆதரவைப் பெற்றுள்ளது. நேரடி விற்பனைக்கான முகப்பிடங்கள் இன்று  திறக்கப்படும். ஆனால் இணையம் வழி டிக்கெட்டுகளை வாங்க பார்வையாளர்களை ஊக்குவிக்கிறோம் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டித் தவிர, 150 அங்காடிக் கடைகளை  உள்ளடக்கிய உணவுத் திருவிழாவும் இங்கு காலை 11.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெறும் என்று நஜ்வான் சொன்னார்.

பள்ளி விடுமுறையின் போது இந்தப் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் சிலர் தங்கள் குழந்தைகளையும் உடன்  அழைத்து வருவார்கள். ஆகவே, வெப்பக் காற்று பலூன்கள் போன்ற பிற நிகழ்வுகளுக்கும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆசிய பூப்பந்துப் போட்டியில் , சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கஜகஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த  விளையாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.


Pengarang :