புத்ராஜெயா, பிப் 13 – பிப்ரவரி 4 முதல் 10 வரை, 6 வது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 3,631 ஆகக் குறைந்துள்ளது, ஒருவர் இறந்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 13,094 டிங்கி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22,058 பேர் டிங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

“டிங்கி காய்ச்சலால் மொத்தம் 10 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ஒன்பது இறப்புகள் பதிவாகியிருந்தன,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், கடந்த வாரத்தில் 180 ஆக இருந்த டிங்கி பரவும் இடங்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

அவை சிலாங்கூரில் (158), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் (18), நெகிரி செம்பிலானில் (10), பேராக்கில் (6), பினாங்கு மற்றும் கெடாவில் தலா இரண்டு மற்றும் பகாங், ஜோகூர் மற்றும் சபாவில் தலா ஒன்று ஆகும்.

“கடந்த 10 ஆண்டுகளில் டிங்கி சம்பவங்களின் போக்கின் அடிப்படையில், அவை வழக்கமாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உச்சத்தை அடைகின்றன. மேலும் இந்த அதிகரிப்பு 2023 இல் தொடங்கியது மற்றும் 2024 இல் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

கணிக்க முடியாத காலநிலை மாற்றங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு (பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள்) டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாகும் என்றார்.

– பெர்னாமா