ANTARABANGSA

இந்னோனேசிய தேர்தல் – அதிபராகப் பிராபோவோவுக்குப் பிரகாசமான வாய்ப்பு

ஜாகர்த்தா, பிப் 15 – இந்தோனேசிய தேர்தலில் அதிபர் பதவிக்குப்
போட்டியிட்ட சிறப்பு படைப்பிரிவின் முன்னாள் தளபதி பிராபோவோ
சுபியான்தோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதை
அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதன் வழி
அந்நாட்டின் தலைமைத்துவத்தில் அண்மைய காலமாக நிலவி வந்த
நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வருகிறது.

நேற்று, தனது ஆதரவாளர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்திற்கு மத்தியில்
பேசிய அந்த 72 வயது தற்காப்பு அமைச்சர், ‘இது அனைத்து
இந்தோனேசிய மக்களின் வெற்றி‘ என வர்ணித்தார்.

பிராபோவோ சுமார் 60 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளதை
சுயேச்சை கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. குறுகிய வாக்குள்
பெரும்பான்மையில் பிராபோவோ என வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு
முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கையை அவர் தாண்டி
விட்டதை இது காட்டுகிறது.

அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகளை தேசிய தேர்தல் நிறுவனம் எதிர்வரும்
மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே சுற்றில் அவர் பெற்ற வெற்றி அடுத்த தலைமைத்துவத்தை யார்
ஏற்பது என்ற குழப்பமான சூழலை அகற்றியுள்ளது என்று பொருளாதார
நிபுணரான பிரையான் டான் கூறினார்.

அதிபர் பதவியிலிருந்து விலகிய ஜோக்கோ விடோடோவின் தேர்வுக்குரிய
வேட்பாளரான பிராபோவோ தாம் நடப்பு கொள்கைகளைத்
தொடரவுள்ளதாக கூறியுள்ளது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதத்தை
அளித்துள்ளது.

இந்த தேர்தலில் திட்டமிடப்பட்ட மற்றும் மிகப்பெரிய அளவிலான
முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களான அனிஸ் மற்றும் கஞ்சார் கூறியுள்ள போதிலும் அதற்கான ஆதாரம் எதனையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

இந்த தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்ததற்கான அறிகுறி எதுவும்
தென்படவில்லை என்று தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரே நாளில் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தேர்தலான இதில் 20,600
பதவிகளுக்கு 259,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


Pengarang :