NATIONAL

ஆசிய பூப்பந்துப் போட்டி- கஜகஸ்தானை 5-0 புள்ளிக் கணக்கில் மலேசிய ஆண்கள் அணி வீழ்த்தியது

ஷா ஆலம், பிப் 15 – நேற்ற இங்கு நடைபெற்ற 2024 ஆசிய அணி பூப்பந்து
சாம்பியன்ஷிப் போட்டியில் (பி.ஏ.டி.சி.) கஜகஸ்தான் அணியை 5-0 என்ற
புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கான இடத்தை தேசிய
ஆண்கள் அணி உறுதிப்படுத்திக் கொண்டது.

இங்குள்ள செத்தியா மாநாடு மையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற
தொடக்க ஆட்டத்தில் புருணைக் குழுவை அதே புள்ளிக் கணக்கில் நடப்பு
சாம்பியனான மலேசிய ஆணி தோற்கடித்தது. இதன் வழி பி பிரிவில்
தோல்வியடையாதக் குழு என்ற பெருமையை மலேசிய ஆண்கள் அணி
பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஓய்வில் இருந்த தொழில்முறை ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரரான
லீ ஜி ஜியா, டிமிட்ரி பனாரினை 21-11, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து
முதல் புள்ளியைப் பெற்றார். அதே நேரத்தில் லியோங் ஜுன் ஹாவ் 21-8, 21-11 என்ற
புள்ளிக் கணக்கில் இப்ரே பேக்கனை வீழ்த்தி முன்னிலை பெற்றார்.

பத்தொன்பது வயதான இளம் வீரர் இயோஜின் ஈவ் 21-7, 21-9 என்ற செட் கணக்கில்
மக்சுத் தாஜிபுல்லாயேவை வீழ்த்தி மலேசியாவின் வெற்றிப் புள்ளியை உறுதி செய்தார்.
பின்னர் நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சூங் ஹான் ஜியான்-முகமது
ஹைகால் நஸ்ரி ஜோடி 21-10, 21-9 என்ற செட் கணக்கில் ரத்மிர் கில்மானோவ்-இப்ரே
பேகென் ஜோடியையும், கோ ஸீ ஃபெய்-நூர் இசுடின் ரும்சானி ஜோடி கைட்முராட்-
மக்சுட் தாஜிபுல்லாயேவ் ஜோடியை 21-26, 21 என்ற புள்ளிக் கணக்கிலும்
தோற்கடித்தன.

புருணை மற்றும் கஜகஸ்தானுக்கு எதிரான போட்டி பயிற்சி ஆட்டம் போல்
தோற்றமளித்தாலும் மலேசியாவின் உண்மையான சவால் இன்று நடைபெறும்
தைவானுக்கு எதிரான போட்டியில் காத்திருக்கிறது. இப்பிரிவில் எந்த அணி
முதலிடத்தைப் பெறுவது என்பதை தீர்மானிக்கும் கடைசி ஆட்டமாகவும்
இது விளங்குகிறது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற மற்றொரு குரூப் பி போட்டியில் தைவான்
புருணை குழுவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

அனைத்து குழு நிலையிலான ஆட்டங்களும் முடிந்த பிறகு நாக்-அவுட்
கட்டத்துக்கான குலுக்கல் நாளை இரவு நடைபெறும்.


Pengarang :