NATIONAL

பெலுரான் சுகாதாரக் கிளினிக்கில் தீ விபத்து- பல்நோக்கு மண்டபத்திற்கு மருத்துவச் சேவை இட மாற்றம்

சண்டகான், பிப் 15 – பெலுரான், தங்காராசோனில் உள்ள சுகாதார
கிளினிக்கில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த
கிளினிக்கின் மருத்துவச் சேவைகள் அனைத்தும் கம்போங்
தெங்காராசோன் சமூக மண்டபத்திற்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டன.

மரக்கட்டமைப்பைக் கொண்ட அந்த கிளினிக்கும் அருகிலுள்ள
குடியிருப்புகளும் இத்தீவிபத்தில் முற்றாக அழிந்ததைத் தொடர்ந்து
வட்டார மக்களுக்குத் தற்காலிக அடிப்படையில் மருத்துவச் சேவை
வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சபா மாநில
சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் அசிட்ஸ் சன்னா கூறினார்.

இந்த விபத்தில் மரத்திலான அந்த கிளினிக் மற்றும் அருகிலுள்ள ஊழியர்
குடியிருப்புகளோடு அனைத்து மருத்துவ உபகரணங்களும் முற்றாக
அழிந்து விட்டன என அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை. இந்த
விபத்துக்கான காரணத்தை சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையினர் ஆராய்ந்து வருகின்றனர் என்று இன்று இங்கு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இந்த தீவிபத்து குறித்து அதிகாலை 1.00 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து பெலுரான் தீயணைப்பு நிலையத்திலிருந்து
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும், 215 கிலோ
மீட்டர் தொலைவைக் கடந்து அவர்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள்
அந்த கிளினிக் 100 விழுக்காடு எரிந்து சாம்பலாகி விட்டது.


Pengarang :