SELANGOR

மாநில நிலையிலான சீனப்புத்தாண்டு நிகழ்வில் 15,000 பேர் பங்கேற்பர்

ஷா ஆலம், பிப் 15 – இம்மாதம் 24ஆம் தேதி ஐ.ஒ.ஐ. சிட்டி மால்
பேரங்காடியில் நடைபெறவிருக்கும் மாநில நிலையிலான சீனப்புத்தாண்டு
கொண்டாட்ட நிகழ்வில் 15,000 பேர் கலந்து கொள்வர் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் மேன்மை தங்கிய ராஜா பெர்மைசூரி
சிலாங்கூர் ஹாஜ்ஜா நோராஷிகின் தம்பதியர் சிறப்பு வருகை புரிவர் என
முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான்
கூறினார்.

முவாஃபாக்காட் விழா எனும் கருப்பொருளிலான இந்த சீனப்புத்தாண்டு
கொண்டாடத்தின் சிறப்பு அங்கமாக 45 நிமிடங்களுக்கு நீடிக்கும் ஐந்து
சிறப்பு படைப்புகளும் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு அங்பாவ்
வழங்கும் நிகழ்வும் விளங்கும் என்று அவர் சொன்னார்.

சிங்க நடனம், கெமலான், டிரம் மற்றும் ஆர்க்கெஸ்டா ஆகியவற்றை
உள்ளடக்கிய மலேசியாவின் பாரம்பரிய நடனங்கள் கொண்ட கலாசார
படைப்புகள் உள்பட பல்வேறு அங்கங்கள் இந்த பொது உபசரிப்பு
கொண்டாட்டத்தில் இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விழாவுக்கு மேலும் மெருகூட்டும் விதமாகப் பாரம்பரிய நிகழ்வுகளான
அங்பாவ் வழங்குவது மற்றும் ஆரஞ்சுப் பழங்களை விநியோகிப்பது
போன்ற நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்ப்ட்டுள்ளது என்று இன்று
இங்குள்ள இன்வெஸ்ட் சிலாங்கூர் அலுவலகத்தில் நடைபெற்ற
செய்தியாளர் கூடத்தில் அவர் தெரிவித்தார்.

காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் இந்த
நிகழ்வில் கலாசாரம் தொடர்பான பட்டறைகளும் இடம் பெறும் என அவர்
மேலும் சொன்னார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு செர்டாங் வட்டாரத்தின் 60 இடங்களிலிருந்து
வெறும் 2.00 வெள்ளி கட்டணத்தில் பொது மக்களை ஏற்றி வருவதற்கு
டி.ஆர்.டி. எனப்படும் தேவையை அடிப்படையிலான டிரான்சிட் வேன்
சேவையை தாங்கள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :