NATIONAL

மூன்று  வீரர்களின் உயிரைப் பலிகொண்ட விபத்துக்குக் காரணமான லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

குருண், பிப். 15 – இம்மாதம்  2ஆம் தேதி வடக்குத் தெற்கு  விரைவுச் சாலையில் மூன்று வீரர்களைப் பலிகொண்ட  சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட  லாரி ஓட்டுநருக்கு எதிராக  இன்று இங்குள்ள  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டது.

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாகத் தன் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து  ஹுசைஃபா அஸ்ஹரி வயது 31 என்ற அந்நபர்  விசாரணை கோரினார்.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில்  வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 77.5வது கிலோ மீட்டரில் குருண் அருகே  வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்தியதன் மூலம் லான்ஸ் கார்ப்ரல் முகமது ஹபீஸ் ஹரிஸ் (வயது 30), சார்ஜண்ட் ரோசாலி அப்துல் ராணி (வயது 39) மற்றும் கார்ப்ரல் முகமது அஸ்ரி இட்ரிஸ்  (வயது 40) ஆகியோர்  உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக அவர்  மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்   10 ஆண்டுகளுக்கு மேற்போகாத  சிறைத்தண்டனை மற்றும் 20,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முகமது ஹுசைஃபாவை ஒரு உத்தரவாதத்துடன் 10,000 வெள்ளி  ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய   மாஜிஸ்திரேட் அனிஸ் சுரயா அகமது, அவரது ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக முடக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையை அவர் மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் நடாஷா அஸ்மி, குற்றஞ்சாட்டப்பட்டவரை 30,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க முன்மொழிந்தார். எனினும்  அவரின் சார்பில் ஆஜரான தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் உம்மி கல்தும் ஜக்காரியா, தனது கட்சிக்காரருக்கு  மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதால் குறைந்தபட்ச ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :