NATIONAL

நாட்டில் அரிசி விநியோகம் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

பாப்பார், பிப் 19 – நாட்டில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு குறிப்பாக
அரிசி விநியோகப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காகப் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான வாழ்க்கைச் செலவினம்
மீதான தேசிய நடவடிக்கை மன்றம் (நாக்குகூல்) எதிர்வரும் வெள்ளிக்கிழமை
(பிப்ரவரி 23) கூடவிருக்கிறது.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விஷயங்களில் நாட்டில் அரிசி
விநியோகம் தொடர்பான விவகாரமும் அடங்கும் என்பதை விவசாயம்
மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியள்ளதாக இந்த
மன்றத்தின் செயலகமாகச் செயல்பட்டு வரும் உள்நாட்டு வாணிக மற்றும்
பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ அர்மிஸாம் முகமது அலி
கூறினார்.

1994ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம்
522) அமலாக்கத்தின் படி நெல் மற்றும் அரிசி விநியோக ஒழுங்கு முறை,
விலை மற்றும் விநியோகம் தொடர்பான அம்சங்கள் விவசாயம் மற்றும்
உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றன.

1969ஆம் ஆண்டு அமைச்சுகளின் சிறப்பு செயல்பாபடுகளின் கீழ்
வெளியிடப்பட்ட உத்தரவின் படி அரிசி மற்றும் நெல் தொழில்துறை
தொடர்பான திட்டம் அல்லது கொள்கை மாற்றங்களுக்கு விவசாயம்
மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்கிறது என அவர்
விளக்கினார்.

நாட்டில் அரிசி விநியோகம் குறித்து இந்த நாக்கூல் கூட்டத்தில்
எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை
விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு
அல்லது நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் வெளியிடுவர் என்றும் அவர்
சொன்னார்.

நிதி விளைவுகள் ஏதும் இருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில்
எடுக்கப்படும் முடிவுகள் அடுத்தக் கட்டமாக அமைச்சரவைக்குக் கொண்டுச்
செல்லப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :