NATIONAL

தாயார், உறவினரை துடைப்பம் மற்றும் கவசத் தொப்பியால் தாக்கிய ஆடவர் கைது

குவாந்தான், பிப் 19 – மெந்தகாப் நகரின் குயிருப்புப் பகுதியிலுள்ள
வீடொன்றில் தன் தாயார் மற்றும் உறவுக்காரப் பெண்ணை துடைப்பம்
மற்றும் கவசத் தொப்பியால் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப்
போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத்
தொடர்ந்து தலைமறைவான அந்த 52 வயது வேலையில்லா ஆடவரை
நேற்று காலை அவரது வீட்டிற்கருகே தாங்கள் கைது செய்ததாகத்
தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹசான்
கூறினார்.

வீட்டைச் சுத்தம் செய்வதற்காகச் சந்தேகப் பேர்வழியின் தாயார் மற்றும்
இந்தோனேசிய பெண் ஒருவருடன் வந்த 31 வயதுடைய அந்த
உறவுக்காரப் பெண்ணை அவ்வாடவர் துடைப்பத்தைக் கொண்டு வலது
கையில் தாக்கியதாக அவர் சொன்னார்.

தாக்குதலுக்குப் பயந்து வீட்டை விட்டு அந்த பெண் வெளியேற முயன்ற
வேளையில் அவரை பின்தொடர்ந்து வந்த அந்நபர் கவசத் தொப்பியால்
அவரின் முதுகு மற்றும் தலையைத் தாக்கியுள்ளார். உறவுக்காரப்
பெண்ணைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் நோக்கில்
சந்தேகப்பேர்வழியின் 77 வயது தாயார் அந்நபரை துடைப்பத்தால் தாக்க
முற்பட்டுள்ளார். எனினும், அந்த ஆடவர் அந்த துடைப்பத்தை பிடுங்கி தன்
தாயாரையே முகத்தில் தாக்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலில் அந்த மூதாட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்ட
வேளையில் உறவுக்காரப் பெண் கை, வலது தோள்பட்டை மற்றும்
தலையில் காயங்களுக்குள்ளானார் என அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தாங்கள் விசாரணை நடத்தி
வருவதாகக் கூறிய அவர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :