NATIONAL

சீன, தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிரான மேல் முறையீட்டு மனு தள்ளுபடி- கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கோலாலம்பூர்,  பிப் 21 –  இந்நாட்டில் உள்ள தாய் மொழிப் பள்ளிகளில் தமிழ்
மற்றும் சீன மொழிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுப்பதற்கு அனுமதிக்கும்படி  விடுத்த  இரண்டு  அமைப்புகளின் மனுவை
கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

கூட்டரசு நீதிமன்ற நீதிபதி மேரி லிம் தலைமையிலான மூவர் கொண்ட
அமர்வு இந்த முடிவை அறிவித்தது. இதன்வழி  மலேசியாவில் தமிழ் மற்றும் சீனப்
பள்ளிகள்  தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கும்
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்துவதாக  மேல் முறையீட்டு நீதிமன்றம்
இதற்கு முன்னர் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதனை எதிர்த்து
முறையீடு செய்வதற்கு அனுமதிக்க கோரி மாப்பிம் எனப்படும் இஸ்லாமிய
கல்வி  மேம்பாட்டுக்  கழகம்  மற்றும் கபேனா  எனப்படும்  மலேசிய   மலாய் எழுத்தாளர்
சங்கம் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் மனுத் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுவை கூட்டரசு நீதிபதி மேரி லிம் தியான் சுங்  தலைமையிலான
மூன்று நீதிபதிகள்  செவிமடுத்தனர்.  அவர்கள்  2-1  என்ற பெரும்பான்மையில் மாப்பிம்
மற்றும் கபேனாவின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தனர். இந்த
வழக்கில்  நீதிபதி   மேரி   ​​லிம் மற்றும்   நீதிபதி  ரோட்ஸாரியா பூஜாங் ஆகியோர்
அந்த மனுவை நிராகரித்தும்   மற்றொரு நீதிபதியான  அப்துல் கரம் அப்துல்
ஜாலில் மனுவை ஆதரித்தும் முடிவை  தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மாப்பிம் மற்றும் கபேனாவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் முகமது
ஹனிஃப் காத்ரி அப்துல்லா ஆஜரானார். இந்த மனுவில் முதல் மற்றும் இரண்டாவது
பிரதிவாதிகளான  கல்வி அமைச்சர் மற்றும் மத்திய அரசு சார்பில் மூத்த கூட்டரசு
வழக்கறிஞர் லியு ஹோர்ங் பின் ஆஜரானார்.

தமிழ் மற்றும் சீனப்  பள்ளிகள்  தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தும்
ம.இ.கா, ம.சீ.ச  சீன மொழிக் கல்விக் குழுக்கள் ஜியாவ் சோங் மற்றும் டோங் சோங்,
சுயேச்சை  உயர்நிலைப் பள்ளி, மலேசிய  தமிழர் சங்கம்,  பேரா தமிழர் திருநாள் குழு,  மலேசிய தமிப்பள்ளிகளின்  ஓய்வுபெற்ற  தலைமையாசிரியர் சமூகநல   சங்கம்.  மலேசிய  சீன  மொழி மன்றம்    மற்றும் மலேசிய தமிழ் நெறி மன்றம் ஆகியவை உள்ளிட்ட எட்டுத் தரப்பினர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக ஆஜராகினர்.


Pengarang :