ANTARABANGSA

காஸா போரின் எதிரொலி- 700,000 பாலஸ்தீனர்கள் பட்டினியால் வாடும் அபாயம்

துனிஸ், பிப் 21- காஸா பகுதியில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில்
மத்திய, வட மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 700,000
பாலஸ்தீனர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயத்தை
எதிர்கொண்டுள்ளதாகப் பாலஸ்தீன அரசாங்கத்தின் அதிகாரத்துவ ஊடக
அலுவலகம் இன்று கூறியது.

சுமார் 24 லட்சம் மக்கள் வசிக்கும் காஸா பகுதி பஞ்சம் நிறைந்த
பகுதியாக விளங்குவதோடு இங்கு நாளுக்கு நாள் நிலைமை
மோசமடைந்து வருவதாக அந்த அலுவலகம் தனது டெலிகிராம் பதிவில்
தெரிவித்தது.

காஸா மற்றும் வட காஸா பகுதிகளில் பிரச்சினை கடுமையாக உள்ளது.
இது உலகலாவிய மனிதப் பேரழிவைக் குறிக்கிறது. இது பெரும்
எண்ணிக்கையிலான மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும். மேற்கூறப்பட்ட
இரு இடங்களில் சுமார் 700,000 பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர்
என்று அது குறிப்பிட்டது.

காஸா பகுதி மீதான முற்றுகையை நிறுத்தும்படி இஸ்ரேல் மற்றும்
அனைத்துலக சமூகத்தை பாலஸ்தீன அரசாங்கத்தின் சார்பில் கேட்டுக்
கொண்ட அந்த அலுவலகம், மனுக்குல பேரழிவு நிகழ்வதற்கு முன்னர்
அடுத்த இரு தினங்களில் வரவிருக்கும் மனிதாபிமான உதவிப் பொருள்கள்
அடங்கிய 10,000 வாகனங்களை அனுமதிக்கும்படி வலியுறுத்தியது.


Pengarang :