NATIONAL

‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ வின் முறையீடு மீது மார்ச் 30ஆம் தேதி  நீதிமன்றம் முடிவு

கோலாலம்பூர், பிப். 21 – பொது இடத்தில்  அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக  தம்மீது  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யக்கோரி  ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ என்று அழைக்கப்படும் போலீஸ் அதிகாரி ஒருவர்  செய்த முறையீட்டின் நிலையைக் கண்டறிய மார்ச் 20 ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார் என்ற முழுப்பெயர் கொண்ட  36 வயதான அந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராக சுமத்தப்பட்டக்  குற்றச்சாட்டு அற்பமானது என்ற அடிப்படையில் சட்டத்துறைத்  தலைவர் அலுவலகத்தில் நேற்று இந்த முறையீடு செய்யப்பட்டதாக அவரின்  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். மனோகரன் கூறினார்.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா கலிசான் முன்னிலையில் செவிமடுக்கப்பட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் மனோகரன்,  200 பக்க முறையீட்டை ஆய்வு செய்ய தங்களுக்கு மூன்று வாரங்கள் தேவை என்று அரசுத் தரப்பு தெரிவித்தாக குறிப்பிட்டார்.

பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில்    ஒரு பெண்ணை திட்டியதோடு  கூச்சலிட்டும் தனது காரை ஹாரனை அழுத்தியும் பொது அமைதிக்கு  இடையூறு விளைவித்தாக கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை  ஷீலா மறுத்து விசாரணை கோரினார்.

கடந்தாண்டு ஜூன் மாதம்  16ஆம் தேதி மாலை 5.26 மணியளவில் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஒரு பேரங்காடியின்  வாகன நிறுத்துமிடத்தில் நுரைஹான் நட்ஸிரா இப்ராஹிம் (வயது  27) என்பவருக்கு எதிராக இந்தக் குற்றத்தை அவர் புரிந்ததாகக் கூறப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 400 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 268வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.


Pengarang :