NATIONAL

கார் சாகசத்தின் போது நான்கு சக்கர இயக்க வாகனத்தை மோதிய இளைஞர் கைது

பத்து பஹாட், பிப் 22- சாலையில் சாகசத்தை நிகழ்த்தும் முயற்சியின்
போது கட்டுப்பாட்டை இழந்து நான்கு சக்கர இயக்க வாகனத்தை மோதிய
டோயோட்டா சுப்ரா ரகக் காரின் ஓட்டுநரை போலீசார் கைது
செய்துள்ளனர்.

இருபது வயதுடைய அந்த இளைஞர் இங்குள்ள தாமான் டேசா
பொட்டானி, ஜாலான் டேசா பொட்டானி 1இல் உள்ள கார் நிறுத்துமிடத்தில்
நேற்று பிற்பகல் 12.15 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாகப் பத்து
பஹாட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
ஷாஹருள்அனுவார் முஷாடாட் அப்துல்லா கூறினார்.

பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த சாகசக் காட்சியைச் சித்தரிக்கும் 37
விநாடி காணொளி பத்து பஹாட் மாவட்ட சாலை போக்குவரத்து
விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் கவனத்திற்கு வந்ததாக அவர்
சொன்னார்.

கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் உளவு நடவடிக்கையின் பயனாகத்
தொழிற்சாலை ஊழியரான அந்த இளைஞர் நேற்று 1.15 மணியளவில்
கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அவ்வாடவரிடம் நடத்தப்பட்ட
சிறுநீர் சோதனையில் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தவில்லை
என்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான
நீதிமன்ற ஆணை இன்று பெறப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த
சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின்
42(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :