NATIONAL

பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவளிக்க மலேசிய எம்.பி.க்கள் எகிப்து பயணம்

புத்ராஜெயா, பிப் 22- பாலஸ்தீன போராட்டத்திற்கு மலேசியாவின்
பிளவுபடாத ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் துணை வெளியுறவு
அமைச்சர் டத்தோ முகமது அலாமின் தலைமையிலான நாடாளுமன்ற
உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கி
24ஆம் தேதி வரை எகிப்து நாட்டிற்கு சிறப்பு வருகை மேற்கொண்டுள்ளது.

இந்த பயணக் குழுவில் லேடாங் தொகுதி பி.கே.ஆர். உறுப்பினர் சைட்
இப்ராஹிம் சைட் நோ, சிக் தொகுதி பாஸ் கட்சி உறுப்பினர் அகமது
தர்மிஸி சுலைமான், கலாபாக்கான் அம்னோ உறுப்பினர் டத்தோ எண்டி
முகமது சுர்யாடி பாண்டி மற்றும் அமானாவைச் சேர்ந்த செனட்டர் டத்தோ
முகமது ஹாத்தா முகமது ரம்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

மலேசியாவின் அவசர மற்றும் மனிதாபிமான உதவிப் பொருள்கள்ளை
காஸாவுக்கு அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் ராஃபா-காஸா எல்லை
சோதனைச் சாவடிக்கு அப்பேராளர் குழுவினர் வருகை புரிவர் என்று அது
தெரிவித்தது.

எகிப்திய அரசாங்கம் மற்றும் ஓப்ஸ் ஏஹ்சான் திட்டத்தின் கூட்டு
முயற்சியின் வாயிலாக இந்த பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த
அறிக்கை குறிப்பிட்டது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இப்பேராளர் குழுவினர் எகிப்திய துணை
வெளியுறவு அமைச்சர் ஹம்டி லோஸாவுடன் மரியாதை நிமித்தச்
சந்திப்பை நடத்தவுள்ளதோடு எகிப்திய செம்பிறைச் சங்கத்தின் தலைமைச்
செயல் முறை அதிகாரி டாக்டர் ரம்லி அல்-நசாரையும் சந்திக்கவுள்ளனர்.

மேலும் இப்பயணத்தின் போது எகிப்திய செம்பிறைச் சங்கம் மற்றும்
பாலஸ்தீன செம்பிறைச் சங்கத்திற்கு முறையே 250,000 அமெரிக்க டாலர்
மற்றும் 500,000 டாலரை வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எல்-அரிஷ் விமான
நிலையம் வழியாக 56 லட்சம் வெள்ளி மதிப்பிலான 100 டன்
மனிதாபிமான உதவிப் பொருள்கள் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டதாக
விஸ்மா புத்ரா கூறியது.


Pengarang :