NATIONAL

கடந்தாண்டு 220 கோடி வெள்ளி லெவி தொகையை எச்.ஆர்.டி.கோர்ப். வசூலித்தது- அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

கோலாலம்பூர், பிப் 22- மனிதவள மேம்பாட்டுக் கழகம் (எச்.ஆர்.டி.கோர்ப்)
கடந்தாண்டு 220 கோடி வெள்ளியை லெவி தொகையாக வசூலித்தது.
அதற்கு முந்தைய ஆண்டில் வசூலிக்கப்பட்டத் தொகை 181 கோடி
வெள்ளியாக மட்டுமே இருந்தது.

கடந்த 1993ஆம் ஆண்டு எச்.ஆர்.டி.கோர்ப் தொடங்கப்பட்டது முதல்
வசூலிக்கப்பட்ட தொகையில் மிக அதிகமானதாக இரு விளங்குகிறது
என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

கடந்தாண்டு எச்.ஆர்.டி.கோர்ப். 178 கோடி வெள்ளி மதிப்பிலான நிதியுதவி
மானியங்களை அங்கீகரித்துள்ளதோடு 22 லட்சம் பயிற்சித்
திட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் செய்தது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற எச்.ஆர்.டி.கோர்ப் ஏற்பாட்டிலான 2024
சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்
அவர் இதனைத் தெரிவித்தார்.

உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கும் ஏதுவாக அனைத்து மலேசியர்களுக்கும் தரமான
பயிற்சிகளை வழங்கும் கடப்பாட்டை மனிதவள அமைச்சு கொண்டுள்ளது
என்றும் அவர் சொன்னார்.

எங்களின் 3கே இலக்கிற்கேற்ப மலேசிய தொழிலாளர்கள் மத்தியில் சமூக
நலனை மேம்படுத்துவது, திறன் மற்றும் உற்பத்தி அதிகரிப்பில் அமைச்சு
கவனம் செலுத்தி வருகிறது என அவர் கூறினார்.

பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை யாரும் தவறவிடாமலிருப்பதை
உறுதி செய்ய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர்
கிராமப்புறங்களில் உள்ள தனிநபர்கள் உள்பட சமூகத்தின் அனைத்து
நிலையிலுள்ள மக்களுக்கும் இந்த பயிற்சி வாய்ப்பு கிட்டுவதை உறுதி
செய்யும்படி எச்.ஆர்.டி.கோர்ப் தரப்பினரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :