ஈப்போ, பிப் 23 – மக்கள் வறுமையிலும் முறையான உணவு மற்றும் குடியிருப்பின்றியும் அவதியுறும் நிலையில் விண்ணை முட்டும் கட்டிடங்களை நிர்மாணிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது என்று பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.

மக்களின் சமூவியல் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை அளிப்பதற்கு வறுமை ஒழிப்பு முக்கியமானதாக விளங்குவதால் வறுமை ஒழிப்புக்கான கடப்பாட்டிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

அனைத்து மக்களும் நலன் பெறும் வகையில் மாநிலத்தின் வளங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு  நமது அரசாங்கத்தின் 2030 பேராக் நல்வாழ்வு திட்டம் முக்கிய இலக்காக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது,  சமூக பாதுகாப்பு ஒருங்கமைப்பை உருவாக்குவது மற்றும் தரமான சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு பேராக் மாநில சட்டமன்றத்தின் 15வது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மேன்மை தங்கிய சுல்தான் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தில் சுபிட்சத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்வதற்கும் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஆரோக்கியமான உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக தீர்க்கம் மீது ஆழமான தொடர்பு அங்கீகரிக்கப்படுவது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நல்ல ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகக் கல்வி விளங்குகிறது. சுகாதாரத் தேர்வுகளை அறிந்து கொள்வதற்கும் அதன் வாயிலாகத் தேசிய மேம்பாட்டிற்கு உரிய பங்களிப்பை வழங்குவதற்கும்  ஆற்றல்மிக்கவர்களாக நம்மை கல்வி உருவாக்குகிறது என்றார் அவர்.