NATIONAL

வறட்சி ஏற்படும் பட்சத்தில் செயற்கை மழைத் திட்டம் அமல் – அமைச்சர் நிக் நஸ்மி தகவல்

புத்ராஜெயா, பிப் 23 – நடப்பு எல் நினோ பருவநிலை மாற்றத்தின் போது பெரிய அளவில் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கும் செயற்கை மழையைப் பெய்விப்பதற்கும் தயாராக இருக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பணிக்கப் பட்டுள்ளன.

தனது தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய புகைமூட்டம் மற்றும் வறட்சி வானிலை மீதான உயர்நிலை  செயற்குழு கூட்டத்தில் இதன் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்  நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.

அரசு துறைகளும் நிறுவனங்களும் பெரிய அளவில் தீயணைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற் கொள்வதற்கும்  அவசியம் ஏற்படும் பட்சத்தில் வளிமண்டல சூழலைப் பொறுத்து செயற்கை மழையைப் பெய்விப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வறண்ட, வெப்ப வானிலை மற்றும் எல் நினோ பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கு அரசாங்கம் எப்போதும் தயார் நிலையில் இருந்து வருவதாகவும்  அவர் சொன்னார்.

வானிலை தொடர்பான தகவல்களை மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் மைசுவாச்சா அகப்பக்கம், சுற்றுச் சூழல் துறையின் காற்றுத் தரக் குறியீடு மேலாண்மை தொடர்பான மைஐ.பி.யு. அகப்பக்கம் ஆகியவற்றின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

மலேசியா தற்போது வடகிழக்கு பருவமழையின் இறுதிக்கட்டத்தில் உள்ளதோடு இந்நிலை மார்ச் இறுதி வரை நீடிக்கும். இக்காலக்கட்டத்தில் மழைப் பொழிவு குறைந்து வறண்ட மற்றும் வெப்ப சூழல் நிலவும் என்றார் அவர்.

தற்போது உலகில் தீவிரமாக இருக்கும் எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக நாட்டில் சீதோஷண நிலை உயர்ந்து வழக்கத்தைக் காட்டிலும் அதிக வறட்சி மற்றும் வெப்பத்துடன் காணப்படும் என்று அவர் சொன்னார்.


Pengarang :