NATIONAL

இரயில் தண்டவாள கொள்முதலில் மறுசூழற்சி நிறுவன இயக்குநர் ஏமாற்றியதாகத் தரகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், பிப் 23 – பயன்படுத்தப்பட்ட இரயில் தண்டவாள
இரும்புகளை கொள்முதல் செய்வது தொடர்பில் மறுசுழற்சி நிறுவன
இயக்குநரை ஒருவரிடம் 210,000 வெள்ளியை மோசடி செய்ததாக தரகர்
ஒருவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அஸ்ருள் டாருள் முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு
வரப்பட்டக் குற்றச்சாட்டை சின் கோக் வேய் (வயது 43) என்ற அந்த தரகர்
மறுத்து விசாரணை கோரினார்.

பயன்படுத்தப்பட்ட தண்டவாள இரும்புகளைப் பெற உதவுவதாக
மறுசுழற்சி நிறுவன இயக்குநரான கே.பூபாலன் (வயது 62) என்பவரை நம்ப
வைத்து அவரிடமிருந்து 210,000 வெள்ளியைப் பெற்றதாகச் சின் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி மாலை 4.11
மணியளவில் செராஸ், ஜாலான் சுங்கை பீசியில் உள்ள நோவ் மெட்டல்
ரீசைக்கிளிங் சென். பெர்ஹாட் நிறுவனத்தில் இக்குற்றத்தைப் புரிந்தாக
அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாயிரம் வெள்ளி வரையிலான
அபராதம், பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனைச்
சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 25,000 வெள்ளி
ஜாமீனில் விடுவிக்க அனுமதித்த நீதிபதி அவரின் அனைத்துலக
கடப்பிதழையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மறு விசாரணையை நீதிபதி அஸ்ருள் வரும் மார்ச் மாதம்
22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :