NATIONAL

46,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக எட்டு குற்றச்சாட்டுகள் ராயல் மலேசியன் கடற்படை உறுப்பினர் மீது சுமத்தப்பட்டது

கோலாலம்பூர், பிப் 23 – இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் பொதுத் துறை வீட்டுவசதி நிதி வாரியத்தின் (LPPSA) கீழ் கடன் விண்ணப்பங்கள் தொடர்பாக 46,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக எட்டு குற்றச்சாட்டுகள் ராயல் மலேசியன் கடற்படை உறுப்பினர் மீது சுமத்தப்பட்டது.

பணியாளர் சேவைப் பிரிவில் முன்னணி பதவி வகிக்கும் கைருல் அனுவார் மாட் சிடெக் (32) நூர் ப்ரோ ஆலோசக நிறுவனத்தின் உரிமையாளரான நோரெர்னாவதி சின் என்பவரிடமிருந்து 10 நபர்களுக்கான “LPPSA“ கடன் விண்ணப்பத்திற்கான RM46,000 பெற்றதாக கூறப்படுகிறது.

ஜனவரி 6, 2021 மற்றும் மே 24, 2022 க்கு இடையில் டேசா செத்தியா வீரா குவார்ட்டர்ஸில் செயல்படுத்தப்பட்ட தாக கூறப்படும் இக்குற்றம், குற்றவியல் சட்டத்தின் 165 வது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிபதி சுசானா ஹுசின் அனுமதித்தார். மேலும, அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மாதம் ஒருமுறை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) அலுவலகத்தில்  நேரில் வந்து பதிவிட உத்தரவிட்டார்.

– பெர்னாமா


Pengarang :