NATIONAL

பெர்சே பேரணியில் பங்கேற்காதீர்- பொதுமக்களுக்குக் காவல் துறை அறிவுறுத்து

கோலாலம்பூர், பிப் 27- பெர்சே எனப்படும் தூய்மையான மற்றும்
நியாயமான தேர்தலுக்கான கூட்டமைப்பு இங்குள்ள தேசிய நினைவுச்
சின்ன வளாகத்தில் இன்று ஏற்பாடு செய்துள்ள 100 விழுக்காடு சீர்த்திருத்த
கோரிக்கைப் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என பொதுமக்களை
காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த உத்தேசப் பேரணி 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின்
விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ்
தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்தின் 9(1) பிரிவுக்கேற்ப பேரணி
ஏற்பாட்டாளர்களிடமிருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை
என்று அவர் சொன்னார்.

சீர்திருத்தக் கொள்கைகளை அமல் செய்யும்படி அரசாங்கத்தை
வலியுறுத்தும் நோக்கில் தேசிய நினைவுச் சின்னத்திலிருந்து
நாடாளுமன்றத்திற்கு ஊர்வலமாகச் செல்லும் இந்த பேரணியில் கலந்து
கொள்ளும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டர்களை
பேரணி ஏற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதாக அவர்
தெரிவித்தார்.

காவல் துறையிடம் தெரிவிக்காமல் இத்தகைய பேரணிகளை நடத்துவது
அச்சட்டத்தின் 9(5)வது பிரிவின் கீழ் குற்றமாகும். ஆகவே இந்த
சட்டவிரோதப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பொது
மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என அவர் ஆலோசனை கூறினார்.

இந்த பேரணியில் கலந்து கொள்வோருக்கு எதிராக சட்டவிதிகளுக்கு ஏற்ப
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :