NATIONAL

சிலாங்கூரில் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுக் கையிருப்பு- மந்திரி புசார் தகவல்

தஞ்சோங் காராங், பிப் 26- சிலாங்கூர் மாநிலத்தின் உணவுக் கையிருப்பு
வறட்சி காலம் உள்ளிட்ட பேரிடர்களின் போது குறைந்தது மூன்று
மாதங்களுக்கான தேவையை ஈடுசெய்யும் அளவுக்குப் போதுமானதாக
இருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் தென் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் உணவு
கையிருப்புக் கிடங்கு கார்போஹைட்ரட் மற்றும் புரோட்டின் சார்ந்த
உணவுகளான அரிசி மற்றும் கோழி போன்றவற்றைக் சேமித்து
வைப்பதற்குப் பயன்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த சேமிப்புக் கிடங்கு நிர்மாணிக்கப்பட்டவுடன் மூன்று மாதங்களுக்குத்
தேவையான உணவு கையிருப்பை சிலாங்கூர் கொண்டிருக்கும். போர்
ஏற்படும் பட்சத்தில் அரிசியை இறக்குமதி செய்ய இயலாது. இருந்த
போதிலும் நம்மிடம் போதுமான உணவுக் கையிருப்பு இருக்கும் என்று
அவர் தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுக் கையிருப்பை
கொண்டிருக்கும் ஒரே மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது என்று நேற்று
இங்கு மடாணி மலிவு விற்பனையைத் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எழுபது லட்சம் மக்கள் தொகையைக்
கருத்தில் கொள்கையில் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுக்
கையிருப்பைக் கொண்டிருப்து பொருத்தமான ஒன்றாகும் என அவர்
சொன்னார்.

இதனிடையே, மக்களின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைச் சமாளிக்கும்
நோக்கில் மாநில அரசினால் அமல்படுத்தப்பட்ட ஏஹ்சான் ராக்யாட்
மலிவு விற்பனையையும் மடாணி மலிவு விற்பனையையும் ஒருங்கிணைப்பாகும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாக அமிருடின் சொன்னார்.

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின்
ஒத்துழைப்புடன் நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை போன்ற
விற்பனைத் திட்டத்தின் வாயிலாகக் கட்டுபடி விலையில் பொருள்களை
வாங்குவதற்குரிய கூடுதல் அனுகூலம் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்
அவர்.


Pengarang :