NATIONAL

பழுதடைந்த குழாய்களை மாற்றுவதற்குப் பெற்ற கடனை ஆயர் சிலாங்கூர் 2031 முதல் செலுத்தத் தொடங்கும்

ஷா ஆலம், பிப் 29 – பழுதடைந்த குழாய்களை மாற்றுவதற்காக பெற்றக் கடனை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் வரும் 2031 ஆம் ஆண்டு முதல் செலுத்தத் தொடங்கும்.

மொத்தம் 24 கோடியே 87 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த கடன் தொகையை வரும் 2046 ஆம் ஆண்டு வரை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் செலுத்தவுள்ள நிலையில்  முதல்  தவணைத் தொகை 71 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கியிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் உள்ள பழைய குழாய்களை மாற்றும் நோக்கில் மாநில அரசிடமிருந்து இந்த கடன் தொகையை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பெற்றதாக அவர் தெளிவுபடுத்தினார்.

ஒப்பந்தத்தின் படி இந்த கடன் தொகைக்கு வட்டி விதிக்கப் படாது. முதல் கடன் தொகை வழங்கப்பட்ட நாளிலிருந்து பத்தாண்டுகள் கழித்துதான் கடனைத் திரும்பச் செலுத்தும் பணி ஆரம்பமாகும் என்பதோடு கடனை செலுத்தி முடிக்க இருபது ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கடனைத் திரும்பப் பெறும் நடவடிக்கை வரும் 2031 ஆம் ஆண்டு தொடங்கும். முதல் தவணைப் பணமாக 71 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளியும் பின்னர் ஆண்டுக்கு 1 கோடியே 24 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளியும் திரும்பப் பெறப்படும் என்றார் அவர்.

தற்போது ஆண்டுக்கு 150 கிலோ மீட்டராக இருக்கும் பழைய குழாய்களை மாற்றும் பணி இவ்வாண்டு தொடங்கி 300 கிலோ மீட்டராகவும் வரும் 2034 ஆம் ஆண்டு முதல் 400 கிலோ மீட்டராகவும் அதிகரிக்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.

இம் மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட புதிய குடி நீர்க்  கட்டண அமலாக்கத்தின் வாயிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அது தெரிவித்தது.


Pengarang :