NATIONAL

சிலாங்கூரிலுள்ள ஏழு நீர்தேக்கங்களில் நீரின் கொள்ளளவு 85 விழுக்காடாக உள்ளது

ஷா ஆலம், மார்ச் 1- நாடு தற்போது வெப்ப நிலையை எதிர்கொண்டாலும் சிலாங்கூரில் உள்ள ஏழு அணைக்கட்டுகளில்  நீர்மட்டம் பாதுகாப்பான அளவில் உள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த் தேக்கங்களிலும் நீரின் கொள்ளளவு 85 விழுக்காட்டிற்கும்  மேல் உள்ளதாக அடிப்படை வசதி மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இதுவரை அபாய நிலை எதுவும் இல்லை. மூன்று அணைகளில் 85 சதவீதத்தில் நீரின் உள்ள வேளையில் மீதமுள்ள அணைகளில்  90 சதவீதத்திற்கு மேல் உள்ளது.  70 சதவீதத்திற்கும் குறைவான அளவு  அபாயக்கட்டத்திற்கான அறிகுறியாகும் என்று அவர் தெரிவித்தார்.

நிலைமை இன்னும் சீராக உள்ளது, இன்னும் மழைப் பொழிவு  உள்ளது. ஆனால்,  எல் நினோ பருவநிலை மாற்றம்   இரண்டாவது காலாண்டில் அதாவது  இவ்வாண்டு ஜூன் தொடங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனையொட்டி நாங்கள் இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இன்று, சிலாங்கூர் மாநில சட்டமன்ற  கூட்டத்திற்குப் பிறகு அனெக்ஸ் கட்டிடத்தில் செய்தியாளர்களைச்  சந்தித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

எச்சரிக்கை கட்டத்திலான வெப்ப நிலை 21 இடங்களில் பதிவாகியுள்ளதாக  மலேசிய வானிலை ஆய்வுத் துறை தனது முகநூல் பக்கத்தில் நேற்று  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

பெர்லிஸ் மாநிலம் முழுவதும் இந்நிலை நீடிக்கும் நிலையில் கெடா மாநிலத்தின் லங்காவி, கோத்தா ஸ்டார், குபாங் பாசு, பாடாங் தெராப், சிக் யான், பெண்டாங், பாலிங் ஆகிய பகுதிகள் இந்த நிலையை எதிர்கொள்ளும்.

மேலும், பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை உத்தாரா, செபராங் பிறை தெங்கா,  தீமோர் லாவுட் ஆகிய பகுதிகளிலும் கடுமையான வெப்ப நிலை பதிவாகும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இது தவிர, பேராக் மாநிலத்தின் கோல கங்சார், சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங், கோலாலம்பூர், சபா மாநிலத்தின் பியூஃபோர்ட், சரவாக் மாநிலத்தின் லிம்பாங் ஆகியவை கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் இதரப் பகுதிகளாகும்.

வடகிழக்கு பருவமழையின் கடைசி கட்டத்தில் மலேசியா உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை முன்னதாக கூறியிருந்தது. இதனால் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்து கடுமையான வெப்பமும் வறட்சி நிலையும் நீடிக்கும் என அது குறிப்பிட்டது.


Pengarang :