NATIONAL

ஜெர்மனி-ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பிரதமர் பயணம்-ரமலான் நிகழ்வுகளில் பங்கேற்பார்

பெர்லின், மார்ச் 11- இன்று  தொடங்கும்   புனித ரமலான் மாதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜெர்மனியில் உள்ள 55 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்களுடன் வரவேற்கவுள்ளார்.

பிரதமர் என்ற முறையில் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான  தனது முதல் பயணத்தை இன்று  தொடங்கும் அன்வார், அங்கு ரமலான் தொடர்பான பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்.

ஜெர்மனியில் சுமார் 55  லட்சம்  முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.  இது அந்நாட்டின் மொத்த  மக்கள் தொகையில் 6.6 சதவீதத்தை பிரதிநிதிக்கிறது. இஸ்லாம் அந்நாட்டின் இரண்டாவது பெரிய சமயமாக விளங்குகிறது.

ஜெர்மனியில் உள்ள  புலம்பெயர்ந்த மலேசியர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் நடத்தி  அவர்களுடன் நோன்பு துறப்பார் என்று ஜெர்மனிக்கான மலேசியத் தூதர் டாத்தின் படுகா டாக்டர் அடினா கமாருடின்  தெரிவித்தார்.

இந்நாட்டில் வசிக்கும் சுமார் 1,800 மலேசியர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாகவும்  மேலும் 1060 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

நோன்பு மற்றும் மக்ரிப் தொழுகையை முடித்த பிறகு, அன்வார் இஸ்யாக் மற்றும் தாராவிஹ் தொழுகைக்காக ஷிட்லிக் பள்ளிவாசல் செல்வார்.

அப்போது அங்குள்ள  முஸ்லீம் சமூகத்துடன் பிரதமர்  கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்று டாக்டர் அடினா குறிப்பிட்டார்.

பெர்லினில் தங்கியிருக்கும் போது அவர்  ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்துவதோடு  ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையரை மரியாதை நிமித்தம்  சந்திப்பார்.

தொழில்துறை தலைவர்களுடனான  பல கட்டச் சந்திப்பு நிகழ்வுகளுக்குப்  பிறகு ஜெர்மன் ஆசிய-பசிபிக் வர்த்தக சங்கம் நடத்தும் 101வது கிழக்கு ஆசிய நட்பு விருந்தில்  கலந்துகொள்வதற்காக அன்வார் ஹாம்பர்க்கிற்குச் செல்கிறார்.


Pengarang :