ANTARABANGSA

காஸாவில் நீடித்த போர் நிறுத்தத்திற்கு மலேசியா-ஜெர்மனி அழைப்பு

பெர்லின், மார்ச் 12- காஸா பகுதியில் நீடித்த போர் நிறுத்தம்
அமல்படுத்தப்படும் அதேவேளையில் கைதிகளை உடனடியாக
விடுவிக்கவும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை
விரைந்து வழங்கவும் மலேசியாவும் ஜெர்மனியும் கோரிக்கை
விடுத்துள்ளன.

மத்திய கிழக்கு பல ஆண்டுகளாக நீடித்து வரும் அவ்விரு
நாடுகளுக்கிடையிலான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அனைத்துலக
சமூக முனைப்பு காட்ட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமும் ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸூம் கூட்டாக
வேண்டுகோள் விடுத்தனர்.

சில வேளைகளில் நமக்குள் சில மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.
ஆனால், போர் போன்ற விஷயங்களில் குறிப்பாகக் காஸாவில் உடனடியாக
போர் நிறுத்தத்தை அமல்படுத்தவும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான
உதவிகளை வழங்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டோம் என்று ஜெர்மனி
பிரதமருடன் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கூறினார்.

ஆறு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு ஜெர்மனி வந்துள்ள
அன்வார் இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் ஷோல்ஸூடன் பேச்சு
நடத்தினார். பல ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் துன்பத்தை எதிர்நோக்கி
வரும் காஸா நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்களும் இச்சந்திப்பில் இடம்
பெற்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்கும் நெருக்கடி ஏற்படக் காரணமாக
இருந்த கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி நிகழ்ந்த சம்பவங்களையும்
மலேசியா கருத்தில் கொள்கிறது. அதே சமயம் பல ஆண்டுகளாகப்
பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள், சூறையாடல்
மற்றும் கட்டாய வெளியேற்றம் போன்ற செயல்களையும் கவனத்தில்
கொள்ளுமாறு ஐரோப்பாவை குறிப்பாக ஜெர்மனியை மலேசியா கேட்டுக்
கொள்கிறது என்றார் அவர்.

இதே விவகாரத்தைத் தொட்டுப் பேசிய ஷோல்ஸ், ஜெர்மனி இஸ்ரேலின்
நெருங்கிய நட்பு நாடாக விளங்கிய போதிலும் காஸா பிரச்சனைக்கு
அமைதியான தீர்வு காண்பதற்கு ஏதுவாக நீடித்த போர் நிறுத்தம்
அமல்படுத்தப்பட வேண்டும் என்ற மலேசியாவின் கருத்தை அது ஏற்றுக்
கொள்வதாகக் கூறினார்.


Pengarang :