NATIONAL

அச்சுறுத்தல், தாக்குதல் தொடர்பில் டத்தோ உள்பட நால்வர் கைது

பாசீர் மாஸ், மார்ச் 12- அண்மையில் கோத்தா பாருவில் ஆடவர்
ஒருவரைத் அச்சுறுத்தியதோடு தாக்கியும் காயப்படுத்தியது தொடர்பில்
டத்தோ அந்தஸ்து கொண்ட நபர் உள்பட நால்வரை போலீசார்
விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.

ஐம்பத்தாறு வயதுடைய அந்த டத்தோ நேற்று மாலை 6.00 மணியளவில்
பிஞ்சாய் சாலை சந்திப்பில் தனியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த
போது கைது செய்யப்பட்டதாகக் கிளந்தான் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்நபரை விசாரணைக்காக இரு தினங்கள் தடுத்து
வைப்பதற்கான அனுமதியை கோத்தா பாரு நீதிமன்றம் வழங்கியதாக
அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள செத்தோங் பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையத்தில்
‘கோ டு சேஃப்டி பாயிண்ட்‘ எனும் நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில தொழில்முறை குத்துச் சண்டை கிளப்பின் தலைவருமான அந்த
டத்தோவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 323/506 பிரிவுகளின் கீழும்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

கோத்தா பாருவில் நிகழ்ந்த குற்றவியல் சம்பவம் தொடர்பில் நான்கு
ஆடவர்களைத் தாங்கள் தேடி வருவதாக மாநில போலீசார் கடந்த மார்ச்
4ஆம் தேதி அறிக்கை ஒன்றில் கூறியிருந்தனர்.


Pengarang :