NATIONAL

பூலாவ் கெத்தாமில் அனுமதியின்றி மீன் பிடித்த நான்கு அந்நிய நாட்டினர் கைது

ஷா ஆலம், மார்ச் 12- பூலாவ் கெத்தாம் கடல் பகுதியில் அனுமதியின்றி
மீன்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படகொன்றைக் கைப்பற்றிய
சிலாங்கூர் மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் அதிகாரிகள்
அதிலிருந்த நான்கு அந்நிய நாட்டினரையும் கைது செய்தனர்.

அப்பகுதியில் ஓப் ஏஹ்சான் மற்றும் ஓப் திரிஸ் 3.0 நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த அமலாக்க அதிகாரிகள் பூலாவ் கெத்தாமிலிருந்து
வடமேற்கே 17.5 கடல் மைல் பகுதியில் நேற்றிரவு 7.00 மணியளவில் ‘சி‘
பிரிவைச் சேர்ந்த உள்நாட்டு படகொன்று மீன்பிடிக்கும் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதைக் கண்டதாக மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்தின்
இயக்குநர் கேப்டன் மெரிடைம் அப்துல் முஹைமின் முகமது சாலே
கூறினார்.

அந்த படகின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது படகின்
ஓட்டுநரான மியன்மார் பிரஜை உள்பட 26 முதல் 39 வயது வரையிலான
நால்வர் அதில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம்
செல்லத்தக்க ஆவணங்கள் இல்லை என்பது சோதனையில்
கண்டறியப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

பிடிபட்ட அனைத்து அந்நிய பிரஜைகளும் பூலாவ் இண்டாவிலுள்ள கடல்
போலீஸ் படை படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்டு மேல்
விசாரணைக்காக மலேசிய கடல் விசாரணை அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் 1985ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டம் மற்றும் 1956/63
குடிநுழைவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :