SELANGOR

பொலிவிழந்த பிளாஸா ஆலம் சென்ட்ரல் அடுத்தாண்டு புதிய தோற்றம் பெறும்

ஷா ஆலம், மார்ச் 13 – சுமார் இருபது ஆண்டுகள் பழைமை வாய்ந்த
பிளாஸா ஆலம் சென்ட்ரலில் இவ்வாண்டு மிகப்பெரிய அளவில் சீரமைப்பு
பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இறுதிவாக்கில்
அது புதியத் தோற்றத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய மற்றும் வசீகரமற்றத் தோற்றத்தை தற்போது கொண்டிருக்கும்
இந்த பேரங்காடியைக் கணிசமான பொருள் செலவுக்கு மத்தியிலும்
மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகப் பி.கே.என்.எஸ்.
ரியல் எஸ்டேட் சென். பெர்ஹாட் தலைமை செயல் முறை அதிகாரி
ஃபாக்ரு ராட்ஸி அப்துல் கனி கூறினார்.

இத்தகைய பழைய பேரங்காடிகளுக்கு (மறுசீரமைப்புச் செய்வதில்)
முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. அதன் உள்வடிவமைப்பில்
உருமாற்றம் செய்வதும் அதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

அந்த பேரங்காடியின் சூழியல் முறை பொருத்தமானதாகவும்
முழுமையானதாகவும் இருப்பதை உறுதி கணிசமான மூலதனச்
செலவினம் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இது மிகப்பெரிய திட்டம் என்பதோடு அதனை இவ்வாண்டில் தொடங்கவும்
திட்டமிட்டுள்ளோம். மறுசீரமைப்பு பணிகள் முற்றுப்பெற்றவுடன்
அடுத்தாண்டு இறுதிவாக்கில் புதிய வடிவிலான பிளாஸா ஆலம்
சென்ட்ரலை நீங்கள் காண்பீர்கள் அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள எஸ்.ஏ.சி.சி. மால் பேரங்காடியில் 2024 சிலாங்கூர்
ரமலான் விழாவை (ஃபெஸ்திரா) தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக்
கழகத்தின் (பி.கே.என்.எஸ்.) தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ
மாமுட் அபாஸ், சிலாங்கூர் நகரின் மத்தியில் தாங்கள் மேற்கொள்ளவுள்ள புதிய மேம்பாட்டுத் திட்டங்களில் பிளாஸா ஆலம் சென்ட்ரல் பேரங்காடியை புதுப்பிப்பதும் அடங்கும் எனத் தெரிவித்தார்.

பிளாஸா ஆலம் சென்ட்ரல் மற்றும் அதன் அருகிலுள்ள நிலத்தை 17
கோடியே 70 லட்சம் வெள்ளிக்கு மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்ரேஷன்
பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து பி.கே.என்.எஸ். கடந்தாண்டு டிசம்பர்
மாதம் கொள்முதல் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :