NATIONAL

உக்ரேனில் போரிடும் ரஷ்ய கூலிப்படையில் மலேசியர்களின் பங்கேற்பா? உள்துறை அமைச்சு மறுப்பு

ஷா ஆலம், மார்ச் 13 – உக்ரேன் நாட்டின் கிழக்கில் ரஷியா தற்காலிகமாக ஆக்கிரமித்துள்ள டோனெட்ஸ்ட் பகுதியில் ரஷியாவுடன் இணைந்து போரிடும் கூலிப்படையினரில் மலேசியர்களும் உள்ளதாக வெளிவந்த குற்றச்சாட்டை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான எந்த ஆதாரத்தையும் அதிகாரிகள் பெறவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

விஸ்மா புத்ராவுக்கு கிடைக்கப்பெற்ற உக்ரேன் தேசிய எதிர்ப்பு மையத்தின் அறிக்கையை தொடர்ந்து இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் சொன்னார்.

டோனேஸ்ட் பகுதியில் ரஷிய இராணுவத்தில் கூலிப்படையினராக மலேசியர்கள் பணியாற்றுவது தொடர்பில் போலீசார் இதுவரை எந்த தகவலையும் பெறவில்லை என்று நாடாளுன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அவர் தெரிவித்தார்.

மலேசியர்கள் ரஷியாவில் ஒப்பந்த அடிப்படையிலான தொழில்முறை இராணுவ வீரர்களாகப் பணிபுரிந்து வருவதாக வெளி வந்த குற்றச்சாட்டு மற்றும் அவர்கள் மீது அரசாங்கம் எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து கெப்போங் தொகுதி உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்குச் சைபுடின் இவ்வாறு பதிலளித்தார்.

டோனேஸ்ட் பகுதியில் ரஷிய இராணுவத்துடன் இணைந்து போரிடும் கூலிப்படையினரில் மலேசியர்களும் உள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அஹிம்சை முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறையை உக்ரேன் சிவிலியன்களுக்குக் கற்றுத் தரும் அமைப்பான தேசிய எதிர்ப்பு மையம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி கூறியிருந்தது.

அப்பகுதியில் ரஷியப் படையினருடன் இணைந்து போரிடும் கூலிப்படையினரில்  கியூபா, நேப்பாளம், பெலாருஸ், செர்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்று அது தெரிவித்தது.


Pengarang :