NATIONAL

இலவச விசா அனுமதி – சீன, இந்தியப் பயணிகளுக்கு விமான டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு அவசியம்

ஷா ஆலம், மார்ச் 13 – இலவச விசா அனுமதித் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு
வரும் சீன மற்றும் இந்திய சுற்றுப்பயணிகள் தாயகம் திரும்புவதற்கான
விமான டிக்கெட்டையும் ஹோட்டல் முன்பதிவையும் கொண்டிருப்பதை
உறுதி செய்யும்படி விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசா சலுகையை தவறாகப் பயன்படுத்துவது, நாட்டில் அதிக
நாட்கள் தங்கியிருப்பது மற்றும் குடிநுழைவுத்துறை விதிகளை
முறையாகப் பின்பற்றாதது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படுவதை உறுதி
செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று உள்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

கடந்த 2023 டிசம்பர் முதல் தேதி தொடங்கி 2024 டிசம்பர் 31ஆம் தேதி
வரை சீன மற்றும் இந்திய சுற்றுப்பயணிகளுக்கு வழங்கப்பட்ட 30 நாள்
விசா சலுகையைக் கருத்தில் கொண்டு குடிநுழைவுத் துறை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விரிவான முன்னேற்பாடுகளையும்
எடுத்தது என்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில் அவர்
தெரிவித்தார்.

கடப்பிதழைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் அதிக காலம் தங்குவது
போன்ற குடிநுழைவு குற்றங்களைத் தடுப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு
மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

அவ்விரு நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் அனுதிக்கப்பட்டதை விட
அதிக நாட்கள் தங்குவதை தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
மற்றும் இது வரை நிகழ்ந்த அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பெக்கான்
தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ புஸி ஷ் அலி எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டை விட்டு வெளியேறும் சீன மற்றும் இந்திய சுற்றுப்பயணிகளின்
எண்ணிக்கையை கண்காணிப்பது, அந்நிய நாட்டினருடன் அதிகத்
தொடர்புடைய பகுதிகளான பிளாசா லோவ்யாட், புக்கிட் பிந்தாங், மஸ்ஜிட்
இந்தியா போன்ற இடங்களில் சோதனைகளை அதிகப்படுத்துவது
உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

அதே சமயம், ‘நோட் டு லேண்ட்‘ (என்.டி.எல்.) அறிக்கையை வெளியிடும்
விஷயத்திலும் அரசாங்கம் தனது விதிமுறைகளைக் கடுமையாகப்
பின்பற்றி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :