NATIONAL

போதைப் பொருள் கலந்த பாலை மகனுக்குக் கொடுத்த வழக்கு – தாய் வாக்குமூலத்தை மாற்றினார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 – தனது 16 மாத மகனுக்கு மெத்தாம்பெத்தமைன் திரவம் கலந்த பாலைக் கொடுத்து துன்புறுத்திய  குற்றச்சாட்டில் முன்னதாக  குற்றத்தை  ஒப்புக்கொண்ட மாது ஒருவர்,  இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில்   குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

நீதிபதி நூர் ருசிலாவதி முகமது முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது  34 வயதான அந்த குடும்ப மாது தனது வாக்குமூலத்தை மாற்றினார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை அம்மாது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி   ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இன்று அவருக்கு  தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இன்று  மீண்டும் குற்றச்சாட்டு  வாசிக்கப்பட்டபோது  40 வயதுடைய அம்மாதுவின்  கணவர் குற்றச்சாட்டை  மறுத்து விசாரணை கோருவதில் உறுதியாக இருந்தார்.

கடந்த பிப்ரவரி  மாதம் 19ஆம் தேதி   மாலை 6.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கள் குழந்தைக்கு மெத்தம்பெத்தமைன் போதைப் பொருள் கலந்த பாலை கொடுத்தாக  அத்தம்பதியர் மீது  கூட்டாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை  செய்யும்
சிறார் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ்  அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்  அகமது சுஹைனி முகமது அமீன் வழக்கை நடத்தும்  வேளையில் அம்மாதுவின் சார்பில் வழக்கறிஞர் டத்தோ அகமது  ஜஹாரில் முஹையாரும் அவரின் கணவர் சார்பில்  வழக்கறிஞர் அடி சுல்கர்னைன் சுல்காப்லியும் ஆஜராகின்றனர்.


Pengarang :