SELANGOR

மலிவு விற்பனைகளை நடத்துவதற்கு இணையம் வழி விண்ணப்பிக்கலாம் – பி.கே.பி.எஸ். 

ஷா ஆலம், மார்ச் 14 – ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைகளை ஏற்பாடு செய்வது தொடர்பான விண்ணப்பங்களை இணையம் வாயிலாக மேற்கொள்வதற்கான ஏற்பாட்டினை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் (பி.கே.பி.எஸ்.) செய்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த விற்பனையை ஏற்பாடு செய்ய விரும்பும் தரப்பினர் https://forms.gle/3xE6acRZRv17X2zT6 என்ற இணைப்பின் வாயிலாக அல்லது போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று அது கூறியது.

இந்த மலிவு விற்பனையை ஏற்பாடு செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள், ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறைகள் விண்ணப்பிக்கலாம் என்று பி.கே.பி.எஸ்.  வர்த்தக மற்றும் சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி ரோஸ்னானி அப்துல் மாலிக் கடந்த ஜனவரி 15ஆம் தேதி கூறியிருந்தார்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்,  ஒரு தட்டு ‘பி‘ கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது..

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.


Pengarang :