NATIONAL

சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்க மாநில அரசுகளுடன் இயற்கை வள அமைச்சு ஒத்துழைப்பு

புத்ராஜெயா, மார்ச் 14 – சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைளைத்
துடைத்தொழிக்கும் விஷயத்தில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை அமைச்சு மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை
நல்கி வரும்.

லிப்பிசில் உள்ள உலு ஜெலாய் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அரிய
வகை மண் கனிமங்களை உட்படுத்திய சுரங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக விசாரணை
தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்று அதன் அமைச்சர் நிக் நஸ்மி நிக்
அகமது கூறினார்.

லிப்பிஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதச் சுரங்க
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவது தொடர்பில்
மக்களவையில் கடந்த திங்கள்கிழமை தாம் வெளியிட்ட அறிக்கை
தொடர்பில் அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

லிப்பிசில் உள்ள உலு ஜெலாய் பாதுகாக்கப்பட்ட வனத்தின் 411வது பகுதி
சட்டவிரோத சுரங்கப் பகுதி என கடநத் 2023ஆம் ஆண்டு அடையாளம்
காணப்பட்டதாக அவர் சொன்னார்.

அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட உபகரணங்களும் ஆய்வகப்
பொருள்களும் அங்கு அரிய வகை மண் கனிம சுரங்க நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் இருந்தன என்று
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் 16,000 டன் அரிய வகை மண்
கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டதாக மக்களவையில் கடந்த திங்கள்கிழமை ஈப்போ தீமோர்
உறுப்பினர் லீ சுவான் ஹோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்
நஸ்மி இவ்வாறு கூறியிருந்தார்.

கெடா மாநிலத்தின் சிக், பகாங் மாநிலத்தின் லிப்பிஸ், பேராக் மாநிலத்தின்
கோல கங்சார் மற்றும் பெங்காலான் உலு நெகிரி செம்பிலான் மாநிலத்தின்
மெராந்தி மற்றும் ஜெலுபு மாவட்டங்களில் இந்த சட்டவிரோதச் சுரங்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், லிப்பிஸ் மாவட்டதிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில்
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக
கூறப்படுவதை பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான்
இஸ்மாயில் வன்மையாக மறுத்தார்.


Pengarang :