NATIONAL

முட்டைக்கான உதவித் தொகை, விலைக் கட்டுப்பாடு தொடரும் – மக்களவையில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 14 – நாட்டில் ஏ,பி. மற்றும் சி கிரேட் கோழி முட்டைகளுக்கு உதவித் தொகை மற்றும் விலைக் கட்டுப்பாடு நடப்பு செயல்முறைகளின் அடிப்படையில் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு கூறியுள்ளது.

அந்த அத்தியாவசிய உணவுப் பொருளின் விநியோகம் குறிப்பாகப் பெருநாள் காலத்தில் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய பண்ணை அளவில் தொடங்கி விநியோக நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.

இதன் தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படும் பட்சத்தில் நடப்பு விநியோக முறை உட்பட அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

பண்ணை நிலையில் கோழி முட்டைகளின் விநியோகம் நிலையாகவும் மக்களுக்கு சுமை அளிக்காத வகையிலும் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று பாயான் பாரு தொகுதி உறுப்பினர் சிம் ட்ஸி ட்ஸின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

மலேசியா தற்போது 2 கோடி முட்டைகளை கூடுதலாக உற்பத்தி செய்து வருவதோடு தனி நபர் வருமான அளவையும் (எஸ்.எஸ்.ஆர்.) அடைந்து விட்டது என்றார் அவர்.

இது தவிர கோழி விநியோகமும் நிலையாக உள்ளதோடு இதன் காரணமாக தற்போது கோழி விலையும் சீராக இருந்து வருகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :