NATIONAL

‘அமுண்டி’ முதலீட்டு மோசடிக் கும்பல் முறியடிப்பு‌- 16 பேர் கைது

கோலாலம்பூர், மார்ச் 15 – நாற்பத்தெட்டு மணி நேரத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்ற ஆசை வார்த்தை காட்டிய   ‘அமுண்டி’ முதலீட்டு மோசடி கும்பலை முறியடித்த  போலீசார், அக்கும்பலைச் சேர்ந்த  16 பேரை கைது செய்துள்ளனர்.

அந்த மோசடிக் கும்பல்  ‘பெலாபுரான் அமுண்டி'(சொத்து மேலாண்மை) சென்.பெர்ஹாட் ‘ என்ற பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் தனது முதலீட்டு நடவடிக்கைகளை தீவிரமாகப் பிரபலப்படுத்தி வந்துள்ளது  என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார்.

பதினான்கு  ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய சந்தேக நபர்கள் கடந்த மார்ச் 6 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் ஜோகூர் மற்றும் சரவாக்கில் மேற்கொள்ளப்பட்ட  இரு சோதனை  நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர்.

அக்கும்பலிடமிருந்து 20 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, மூன்று ஏடிஎம் கார்டுகள்  ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்  என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

பிடிபட்ட 21 முதல்  70 வயதுடைய அந்நபர்கள்  அந்நிறுவனத்தின் தொழிலாளர்களாகவும் மோசடிக்கு தங்கள் வங்கிக் கணக்குகளை கொடுத்தவர்களாகவும் உள்ளனர் என்றார் அவர்.

அக்கும்பல் 48 மணி நேரத்தில்   உயர் வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படும் நான்கு முதலீட்டுத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியிருந்தது.

இதுவரை,  இந்த மோசடி திட்டத்திற்கு எதிராக 15 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 166,331.74 வெள்ளி மதிப்புள்ள இழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்  420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


Pengarang :