NATIONAL

அதிக விலையில் உணவுகளை விற்கும் வர்த்தகர்களைப் புறக்கணிப்பீர்- அமைச்சர் ஆலோசனை

புத்ராஜெயா, மார்ச் 15 – அதிக  விலையில் உணவுகளை விற்கும் வியாபாரிகளை புறக்கணிக்கும்  அதிகாரம் பயனீட்டாளர்களுக்கு  உள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் பவுஸியா சாலே கூறினார்.

ரமலான் சந்தைகளில்  உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும்,  அதிகக் கட்டணத்தை நிர்ணயிக்கும்  வர்த்தகர்களிடம் பொருள்களை வாங்குவதை தவிர்ப்பதில் பயனீட்டாளர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

உணவு விலை அதிகரிப்பு  பற்றி புகார்கள் இருந்தாலும், வர்த்தகர்கள் அதிக லாபம் ஈட்டுவது  அல்லது நியாயமற்ற விலை உயர்வை சுமத்துவதை தடுப்பதில்  அமைச்சு உறுதியாக உள்ளது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள  பிரிசிண்ட் 14 இல் 2024  ரஹ்மா ரமலான் சந்தையை  (பி.ஆர்.ஆர்.)  அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

வர்த்தகர்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்க பயனீட்டாளர்கள் கட்டாயப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரமலான் சந்தைகளில் முர்தாபாக் உணவு விலை உயர்வை உதாரணம்  காட்டிய அவர், இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும் வெங்காயம் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அதன் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றார்

உணவுப் பொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சு  126 புகார்களைப் பெற்றுள்ளதாகவும்  11 புகார்கள் மீது அது  விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :