NATIONAL

ஜெர்மனி, பிரான்ஸ் பயணத்தின் வழி வெ.4,600 கோடி முதலீட்டு வாய்ப்புகள்

கோலாலம்பூர், மார்ச் 20 – அண்மையில் ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு  மேற்கொள்ளப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டுப் பயணத்தின் வாயிலாக 4,600 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடு மற்றும் 240 கோடி வெள்ளி மதிப்புள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா பெற்றுள்ளது.

அந்நாடுகளின் பிரசித்தி பெற்ற நிறுவனங்களான எக்ஸ்-பேப், மேலாக்சிஸ், இன்ஃபினியோன் டெக்னோலோஜிஸ், ஏர்பஸ் குரூப், ஸ்கூட் க்ளாஸ், பி.எம்.டபள்யூ., நெக்ஸ்ப்ரியா, பி-பிராவுன், மிஷலின் ஆகியவற்றின் பங்கேற்பையும் மலேசியா பெற்றுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.

மலேசியாவில் முதலீடு செய்யவும் இந் நாட்டுடன் விவேக பங்காளித்துவ ஒத்துழைப்பை நல்கவும் மூன்று நிறுவனங்கள் தங்களின் ஆர்வத்தை புலப்படுத்தியுள்ளதாக இந்த முதலீட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

இந்நாட்டில் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் உயர் திறன் கொண்ட மனித ஆற்றலின் உருவாக்கத்திற்கும் இந்த ஒத்துழைப்பு பெரிதும் துணை புரியும் என்பதோடு நாட்டின் பொருளாதார வடிவமைப்புக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என்று அவர் சொன்னார்.

ஏற்றுமதியைப் பொறுத்த வரை, மலேசிய வளங்களைத் தொடர்ந்து பெறுவதற்கான தொடர்ச்சியான ஆர்வத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக ஏர்பஸ் குரூப், டியூஷி பான், சாப்ரான், எக்ஸ்-பேப் (பிரான்ஸ்) ஆகிய நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு நடத்தினோம் என்றார் அவர்.

ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் வர்த்தகர்களுடனான இந்த சந்திப்பு நமது வியூக ஈடுபாட்டின் ஒரு பகுதியாகவும் 2030 புதிய தொழில்துறை பெருந்திட்ட அமலாகத்தை புதுப்பிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது. மலேசியாவில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக விரைவான திட்ட அமலாக்கம் மற்றும் நட்புறவு வர்த்தக நிலைப் பாட்டிற்கான கடப்பாட்டை நாம் கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :