NATIONAL

பாடாங் பெசார் எல்லை நுழைவாயில் நள்ளிரவு 12.00 மணி வரை செயல்பட பெர்லிஸ் பரிந்துரை

பாடாங் பெசார், மார்ச் 20 – பாடாங் பெசாரில் உள்ள குடிநுழைவு, சுங்க,
தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு (ஐ.சி.கியு.எஸ்.) தொகுதியில் உள்ள
எல்லை நுழைவாயிலை நள்ளிரவு 12.00 மணி வரை திறந்திருக்க
பெர்லிஸ் அரசாங்கம் உள்துறை அமைச்சிடம் பரிந்துரைக்கவுள்ளது.

தற்போது அந்த நுழைவாயில் இரவு 10.00 மணி வரை மட்டுமே
செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சுக்கு அனுப்புவதற்காகத் தாங்கள் பரிந்துரை அறிக்கை
ஒன்றைத் தயாரித்து வருவதாகவும் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் அது
தயாராகி விடும் என்றும் பெர்லிஸ் எல்லை ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு
செயல்குழுவின் தலைவர் இஸிசாம் இப்ராஹிம் கூறினார்.

கூடிய விரைவில் இந்த பரிந்துரையை சமர்ப்பிக்க நான் விரும்புகிறேன்.
நோன்பு பெருநாளுக்குப் பின்னர் இதன் தொடர்பில் அனைத்து
நிலையிலான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதோடு மேலும்
இரண்டு அல்லது மூன்று முறை கூட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

எது எப்படி இருப்பினும் இவ்வாண்டு இறுதிக்குள் உள்துறை அமைச்சிடம்
இந்த பரிந்துரையை முன்வைப்போம். இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு
நிலையில் எந்த ஆட்சேபமும் இருக்காது என நினைக்கிறேன்.
அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர்
சொன்னார்.

நேற்று இங்கு பெர்லிஸ் மாநில நிலையிலான 2024 மலேசியா-தாய்லாந்து
இருதரப்பு உறவு மடாணி இஹ்யா ரமலான் நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தற்போது இரவு 7.00 மணி வரை செயல்படும் வாங் கெலியானில்
உள்ள மலேசிய-தாய்லாந்து ஐ.சி.கியூ.எஸ். மையத்தை இரவு 8.00 மணி வரை திறந்து வைப்பதற்கான கோரிக்கையும் இந்த பரிந்துரைக் கடிதம் வாயிலாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று இஸிசாம் கூறினார்.


Pengarang :