SELANGOR

பேரிடரை எதிர்கொள்ள பருவநிலை மாற்றக் கொள்கை- சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்தும்

ஷா ஆலம், மார்ச் 20 – சிலாங்கூர் மாநில அரசு விரைவில் பருவநிலை
மாற்றம் மீதான கொள்கையை அமல்படுத்தவுள்ளது. நடப்பு நிலவரங்கள்
தொடர்பான தகவல்களை வழங்குவது மற்றும் இயற்கைப் பேரிடர்களை
எதிர்கொள்ள தயாராவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த
இக்கொள்கை அமல்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தொடர்பில் விளக்கங்களை
வழங்குவதையும் இந்த கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது என்று
சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின்
குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மாநில அரசின் திட்டங்களில் நாம் சேர்க்கவிருக்கும்
அம்சங்களில் இதுவும் அடங்கும் என்று சிலாங்கூர்கினியிடம் அவர்
சொன்னார்.

கார்பன் வெளியேற்றத்தைத் குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தை
எதிர் கொள்வதற்கு ஏதுவாக பசுமைத் தொழில்நுட்ப நடவடிக்கை
திட்டத்தை மாநில அரசு உருவாக்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஊராட்சி மன்ற நிலையிலான அனைத்து கொள்கை திட்டமிடலிலும்
கார்பன் குறைந்த நகர செயல்திட்ட வடிவமைப்பைப் பயன்படுத்துவதன்
மூலம் மாநில அரசு பசுமை நகரத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது
என்றார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கத்திற்கு மாறாக பெய்த
கடும் மழை காரணமாக சிலாங்கூர் மாநிலத்தில் பெரு வெள்ளம்
ஏற்பட்டது. குறுகிய காலத்தில் 380 மில்லி மீட்டர் அதாவது ஒரு
மாதத்திற்கு ஈடான அளவு மழை பெய்தது மற்றும் கடல் பெருக்கு
ஆகியவை அந்த மோசமான வெள்ளத்திற்குக் காரணமாக இருந்தன.


Pengarang :