ANTARABANGSA

காஸா மக்களில் பாதிபேர் பட்டினியால் வாடும் அவலம்- விரைந்து நடவடிக்கை எடுக்க உலக வங்கி கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 20 – சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பாதிக்கும் காஸா மக்கள் பட்டினியால் வாடும் நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உலக வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

காஸா மக்களுக்குத் தேவையான மருந்துகள், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் விரைவாகவும் முழுமையான முறையில் கிடைப்பதற்கு ஏதுவாக அவர்களை அடைவதற்கான வழிகள் விரைந்து எந்த ஒரு தடையுமின்றியும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதர அனைத்துலக சமூகங்களுடன் இணைந்து நாங்களும் விடுகிறோம் என்று அது கூறியது.

காஸா தீபகற்பத்தின் மொத்த மக்கள் தொகையினர் அல்லது ஏறக்குறைய 22 லட்சத்து 30 ஆயிரம் பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்படுத்துதல்  அறிக்கை கூறுகிறது.

மார்ச் மத்தியில் தொடங்கிய ஜூலை மத்தியப் பகுதி வரை ராஃபாவில் தரைவழித் தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என கணிக்கப்படும் நிலையில் காஸா மக்களில் பாதிப்பேர் அதாவது 11 லட்சத்து 10 ஆயிரம் பேர் பெரும் பாதிப்பை எதிர்கொள்வர் என அஞ்சப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவித்தது.

இது தவிர, வட காஸா மற்றும் இதரப் பிராந்தியங்களில் வரும் மார்ச் மத்தியில் தொடங்கி மே மாதம் வரை பட்டினி சம்பவங்கள் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

காஸாவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக உலக வங்கியின் இயக்குநர் வாரியம் கடந்தாண்டு 3 கோடியே 50 லட்சம் வெள்ளியை சக பங்காளி அமைப்புகள் மூலம் ஒதுக்கீடு செய்தது.

ஐ.நா. சிறார் நிதியகம் (யுனிசெஃப்), உலக உணவுத் திட்டம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை உலக வங்கியின் சக பங்காளி அமைப்புகளாகும்.


Pengarang :