NATIONAL

பழச்சாறுக்குச் சக ஊழியரை கொலை செய்த பாகிஸ்தானி

ஷா ஆலம், மார்ச் 20: நேற்று செக்‌ஷன் 36யில் உள்ள தொழிற்சாலையின் தொழிலாளர் ஒருவர் தங்கும் விடுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொன்றார்.

கொலை செய்யப்பட்ட நபர் (49) நோன்பு திறக்கும் போது தனது ஆரஞ்சு பழச்சாற்றை குடித்ததைக் கண்டு கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானிய நபர் கோபமடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என ஷா ஆலம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

“51 வயதான சந்தேக நபர் சமையலறையிலிருந்து எடுக்கப்பட்ட கத்தியைப் பயன்படுத்தி சக ஊழியரை பல முறை குத்தியுள்ளார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான தகவலை இரவு 7.20 மணிக்குத் தனது தரப்பு பெற்றதாக முகமட் இக்பால் கூறினார். பின் சந்தேக நபரைக் கைது செய்து பாதிக்கப் பட்டவரைக் குத்தப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் தொழிற்சாலையில் தங்கும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட கொள்கலனில்  ஒன்றாக தங்கி இருந்தது விசாரணையில் கண்டறியப் பட்டுள்ளது என்றார்.

சந்தேக நபர் இன்று தடுப்பு காவலில் வைக்கப்படுவார். குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனைக்கு வழி வகுக்கும் என்றும் முகமட் இக்பால் கூறினார்.

மேலும் தகவல் தெரிந்த தரப்பினர் விசாரணை அதிகாரி ஏசிபி முகமட் அனுவார் முகமட் அமிலா@ ஹாருனை 0192255597 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

– பெர்னாமா


Pengarang :